ஆயுதப் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர தமிழர்களுக்கு சுதந்திரம் உண்டு

ஆசிரியர் - Admin
ஆயுதப் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர தமிழர்களுக்கு சுதந்திரம் உண்டு

ஆயுதப் போரில் உயிரிழந்த தமது சகல உறவுகளையும் அமைதியான முறையில் நினைவுகூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய உறவுகளை புலிகள் என்றோ புலிகளின் உறவினர்கள் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். அவர்களின் நினைவேந்தலைத் தடுப்பது தடுப்பது மாபெரும் மனித உரிமை மீறல் எனவும் அவர் கூறியுள்ளார். 

மாவீரர் நாள் தற்போது தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் அதற்கு அனுமதி வழங்குவீர்களா? என்று சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் நிலவிய ஒழுங்கற்ற அரசியல் தலைமைகளால்தான் ஆயுதப் போராட்டம் உருவெடுத்தது. அந்தப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தமிழ் மக்களை குறிவைத்து அவர்களுக்கு எதிரான கெடுபிடிகளை மஹிந்த ஆட்சியில் முன்னெடுத்தார்கள். 

அந்த அராஜக நிலைமைகளுக்கு 2015ஆம் ஆண்டு முடிவு கட்டப்பட்டது. தமிழ் மக்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வரும் நிலைமை ஏற்படுத்தப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் உயரிழந்த தமிழ் மக்களின் உறவுகளை நினைவுகூர எமது அரசுதான் அனுமதி வழங்கியது. எனவே, நான் ஜனாதிபதியான பின்னரும் அந்தச் சுதந்திரத்தை தமிழ் மக்களுக்கு வழங்குவேன். அதை நான் தட்டிப் பறிக்கமாட்டேன்.

அதேவேளை, 30 ஆண்டுகளாகப் போராடிய இராணுவத்தினரையும் மறக்கமாட்டேன். உயிரிழந்த இராணுவத்தினரை நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நினைவுகூருவோம். இராணுவத்தின் குடும்பங்களுக்கு நல்லாட்சி அரசில் வழங்கப்பட்ட உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவேன்.

இன, மத, மொழி பேதமின்றி எமது ஆட்சி முன்னெடுக்கப்படும். சகலருக்கும் சம உரிமை வழங்குவதே எனது தீர்மானம் – என்றார் சஜித் பிரேமதாச.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு