தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சட்டத்தரணி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை!

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சட்டத்தரணி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை!

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா படையினரின் அழுத்தங்களைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவையும்  ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் சட்டத்தரணி குருபரனுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது. 

சிங்களப் படையினரால் தமிழ் இளைஞர்கள் 12 பேர் கடத்தப்பட்டு காணாமற்போனமை தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக குருபரன் வாதாடி வருகின்ற நிலையிலேயே அவருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடைக்கு எதிராக தமிழ் இளைஞர்;கள் குரல்கொடுத்து வருகின்றனர். விரைவில் வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.  

பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்துவரும் வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணித்தது.

இலங்கை இராணுவத்தின் அழுத்தத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமிக்கு வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், பொதுநலம் சார்ந்த வழக்குகளில் 2011ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் முன்னிலையாகி வருகின்றார். பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு நீதிப்பேராணை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார்.

இந்த ஆள்கொணர்வு நீதிப்பேராணை மனுக்களில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாவது தொடர்பிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இலங்கை இராணுவத்தால் முறையிடப்பட்டது.

அதனடிப்படையிலேயே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் எடுத்திருந்தது.

இந்தக் கடிதம் கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக்கு அறிவிக்கும் பத்திரம் தகுதிவாய்ந்த அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை இன்று சனிக்கிழமை முற்பகல் கூடியது. கலாநிதி கு.குருபரனின் விடயம் இன்று பிற்பகல் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அறிவிக்கவேண்டும். அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்தது.

மேலும் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவு தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை தொடர்பில் இன்றைய பேரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதுதொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பேரவை உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியிருந்தனர்.

நீண்ட விவாதத்தின் பின் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை ஏற்று அதுதொடர்பில் அவருக்கு அறிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும் அவர் பிரசித்த நொத்தாரிசு பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்டவருக்கு உரிய அறிவிப்பை வழங்காது இழுத்தடித்தமை தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குருபரன் சட்டத்தரணி மற்றும் சட்டத்துறைத் தலைவர் என்பதற்கு அப்பால் சிறந்த தமிழ்த் தேசிய செயற்பாட்பாட்டாளர் ஆவார். தமிழ்க் கட்சிகளின் அராஜகப் போக்குகளைக் கண்டிக்கும் அவர் தமிழர்கள் சுயநிர்ணய உரித்துடன் வாழ்வதற்கு தகுதி உடையவர்கள் என பல இடங்களிலும் கருத்துருவாக்கம் செய்துவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Radio