11 பேரை காணாமல் ஆக்கிய கடற்படை அதிகாரிகள் தேர்தல் பிரசாரத்தில்!
கொழும்பில் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர். குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய இந்த அதிகாரிகள் தொடர்ந்தும் கடற்படையில் கடமையாற்றி வந்ததுடன் எவரும் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. இவர்களில் சில அதிகாரிகளுக்கு கடற்படையில் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்படும் சில கடற்படை அதிகாரிகள் திருகோணமலை பிரதேசத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 கடற்படையினர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் 10வது சந்தேக நபர் மட்டுமே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் கடற்படையிலும் கடமையாற்றி வருகின்றனர்.