முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தருக்கு நடந்தது என்ன?
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் காணாமல் போயிருந்த இளம்குடும்பஸ்தர், மர்ம நபர்களால் வான் ஒன்றில் நடத்தப்பட்டு தாக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர், வாகனத்தில் ஏற்றி வரப்பட்டு கூழாமுறிப்பு பகுதியில் நேற்றிரவு தள்ளிவிடப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தற்காப்பு கலை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான தனுஷன் என்ற இளம் குடும்பஸ்தரை காணவில்லை என அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டு தள்ளி வீழ்த்தப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குடும்பத்தினர் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கபட்டு வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து தனுசன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 7 ஆம் திகதி இரவு உணவு வாங்கிக்கொண்டு வீடு செல்லும் வழியில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் வவுனியா செல்வதற்கான வழியை கேட்டு விட்டு, அவரை இழுத்து வாகனத்தின் உள்ளே போட்டு கண்களை கட்டி கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.
45 நிமிடங்கள் வளைந்து வளைந்து சென்ற வாகனம் இறுதியில் ஒரு காட்டு பகுதியை போன்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றை அடைந்தது, அங்குள்ள அறையொன்றில் தன்னை அடைத்து விட்டு, அடுத்தநாள் காலை - 8 ஆம் திகதி முதல் ஒருவர் தன்னை விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் புலிகளிடம் இருந்து நிதி பெறுகின்றாய் . விடுதலை புலி ஆதரவாளர் என்று தாக்கியதாகவும் உண்மையை கூறு எவ்வாறு பணம் வருகின்றது என கேட்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக நேற்று இரவு மீண்டும் வான் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைத்து வீழ்த்தி விட்டு சென்று விட்டாகவும் அவர் தெரிவித்துள்ளார்.