வவுனியாவில் சோதனைச் சாவடிகளால் பதற்றம்!
வவுனியாவில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வவுனியா- ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளில் வீதியை மறித்து பரல்கள் அடுக்கி, மக்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் வவுனியா நகர்ப்புறங்களில் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் வண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை வவுனியா, பூந்தோட்டம் மதீனாநகர் சந்தியில் நேற்றுக்காலை புதிதாக இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதீனாநகர் பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் ஒரு சில வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் நேற்று அங்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வீதியால் பயணிக்கும் ஒரு சில வாகனங்கள் பதிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அங்கு இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அது அகற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் குறித்த சோதனை சாவடி அவ்விடத்தில் மீண்டும் அமைக்கப் பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
கடந்த வாரமும் பம்பை மடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.