SuperTopAds

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது

ஆசிரியர் - Admin
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது

இந்தியாவின் பிரதமராக 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ (ஸ்வாச் பாரத்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பொது இடங்களில் மக்கள் மல-ஜலம் கழிப்பதால் வரும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அநாகரிகமான பழக்கவழக்கங்களை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களின் வீடுகளில் 5 ஆண்டுகளில் 6 கோடி கழிப்பறைகளை கட்டித்தருவது இந்த  ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதிக்குள் இந்த இலக்கை நிறைவு செய்ய செயல்திட்டம் தீட்டப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டும் உள்ளது.


பில்கேட்ஸ் தம்பதியர்

இந்நிலையில், இந்த தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் - மெலின்டா பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உயரிய விருது வழங்கப்படவுள்ளது. இந்த தலவலை பிரதமர் அலுவலகத்தின் இணைமந்திரி ஜித்தேந்திரா சிங் இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்கா செல்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அங்கு வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிலையில் பில்கேட்ஸ் - மெலின்டா பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் விருது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பில் கேட்ஸ் உலகம் முழுவதும் பில்கேட்ஸ் - மெலின்டா பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு பொதுச்சேவைகளை செய்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.