SuperTopAds

ஐ.தே.கவுக்கு காவடி எடுக்கும் கூட்டமைப்பு – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor II
ஐ.தே.கவுக்கு காவடி எடுக்கும் கூட்டமைப்பு – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு காவடி எடுக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பால், மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமா, அதற்கான ஆதாரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் மக்கள் விடுதலை முன்னணிக்கு விசேடமானது. பொருளாதார ரீதியாக மக்களை பாகுபாடிற்கும், வித்தியாசத்திற்கும் உள்ளாக்கியிருப்பது போன்றே, இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமையும் பாகுபாடாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பவனையும், இல்லாதவனையும் வித்தியாசப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் விருப்பு வாக்கு நாய்ச் சண்டை கிடையாது. இந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு ஏன் தேவை என்பதனை இங்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாய நிலமை காணப்படுகின்றது.

இன்றுள்ள மைத்திரி மற்றும் மஹிந்த அணிகளைத் தேடிப்பார்க்கின்ற போது, இரு கும்பல்களிலும் கள்ளர்களும் பொய்யர்களும் இருக்கின்றார்கள்.

இந்த விடயம் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், வடக்கில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினை எடுத்துக் கொண்டால், கடந்த காலத்தில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளைப் பயன்படுத்தி மக்களின் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுக்கவில்லை.

இப்போது, தேர்தல் நெருங்கிய பின்னர் தான் வீதிகளைப் போடுகின்றார்கள். மக்களிற்கான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணியைப் பார்த்து சிங்களக் கட்சி என்று கூறுகின்றது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று அங்கு, மக்களுக்கு விரோதமான அனைத்து உடன்படிக்கைகளுக்கும், அனைத்துச் சட்டங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு காவடி எடுக்கும் கட்சியாகவே காணப்படுகின்றது.

மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு விற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இன்று மக்கள் விடுதலை முன்னணியைப் பார்த்து இனவாதிகள் எனக் கூறுகின்றார்கள்.

அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாட்டிற்கு ஆதரவு அளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமா? அதற்குரிய ஆதாரங்கள் உள்ளனவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெற்கில் மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று வடக்கிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்குரிய நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க முடியாமல் தோல்வி கண்டுள்ள போதிலும், தேர்தலுக்குச் சம்பந்தமில்லாத அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

வடமாகாண மக்களுக்கு என்று ஒரு குரல் தேவைப்படுகின்றது. ஏனைய கட்சிகள் மக்களுக்கான குரல் கொடுக்க மறுத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும், காணாமல் போனோர் பிரச்சினை, காணாமல் போனோர்களின் அலுவலகம் அமைப்பது தொடர்பாக சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு குரலை மேலோழுங்கச் செய்வதற்கு, தமிழ் மக்களின் குரலாக மாறவுதற்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு உதவ முன்வர வேண்டும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒரு சபை தானும் கைப்பற்றினால், மக்களின் அபிவிருத்திக்கு நாம் பாதை அமைப்போம். திஸ்ஸராமையில் ஒரு சபை கிடைத்து அங்கு அந்த சபையை திறம்பட நடாத்தியிருந்தோம். அது அந்த மக்களுக்கு நன்றாக தெரியும்.

எனவே, வடபகுதி மக்களின் குரலாக ஒலிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு சந்தர்ப்பம் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.