தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு 3 ஆண்டுகளுக்குள் அரசியல் தீர்வு!

ஆசிரியர் - Admin
தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு 3 ஆண்டுகளுக்குள் அரசியல் தீர்வு!

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு, இன்னும் மூன்று வருடங்களுக்குள் உறுதியான அரசியல் தீர்வொன்றை வழங்கத் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுன்னாகம், ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘யாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாணத்தின் கல்வி நிலையையும் உயர்த்த இன்னும் துரிதமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் எனும் ரீதியில் இது எமது பிரதான கடமையாகவே கருதப்படுகிறது. இது இலகுவான ஒரு காரியமல்ல. இதற்காகத் தான் யாழில் இருந்து இராஜாங்க அமைச்சர் ஒருவரை நாம் முதன்முதலாக நியமித்தோம்.

பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துள்ள இந்த யாழ்ப்பாணத்தை அனைத்து வழிகளிலும் உயர்த்த வேண்டும் என்பதுதான் எமது பிரதான நோக்கமாக இருக்கிறது. இதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கிணங்க, யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் தரமுயர்த்த நாம் நடவடிக்கை எடுப்போம்.

மாணவர்களுக்கான காப்புறுதி, மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கல்வி, பாடசாலைகளில் நீர் மற்றும் மின்சார வசதி என அனைத்தையும் நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம். அத்தோடு, அனைத்து மாணவர்களுக்கும் 13 வருடங்களுக்கு கல்வியையும் கட்டாயப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து செயற்பாடுகளையும் கடந்த காலங்களில் செய்துள்ளோம்.

அதேபோல, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் நாம் தீவிரமான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுதான் வருகிறோம். நாம் இலங்கையர் என்று கூறுவதில் பெருமைப்பட வேண்டும். உண்மையில், 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு அதிகமாகியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அத்தோடு, அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை இங்குக் கூறிக்கொள்கிறேன்.

ஆனால், துரதிஸ்டவசமாக நாடாளுமன்றில் எமக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் அதனை துரிதமாக மேற்கொள்ள எம்மால் முடியாமல் உள்ளது. எனினும், இவ்விடத்தில் நான் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். அதாவது நானும் எனது கட்சியும் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.

சிங்களவர்கள், முஸ்லிம்களுக்கு பாதிப்பேற்படுத்தாத வகையிலான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவது தொடர்பாக, நாம் எந்தத் தரப்பினருடனும் பேசத்தயராகவே இருக்கிறோம். இன்னும், இரண்டு மூன்று வருடங்களில் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக இருக்கிறது.

மாகாண ரீதியாக மட்டுமன்றி, உள்ளுராட்சி ரீதியாகவும் அதிகாரப் பரவலாக்கலை வழங்கி, ஸ்திரமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது நிச்சயமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் நடைபெறும் என்பதையும் நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். இது நிறைவேறிய பிறகு நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் பெருமையாக வாழ முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு