நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும்! - ஜேவிபி
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மஹிந்த தரப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு, தமிழர்களின் உரிமைக்காக கூட்டமைப்பினர் பேராடுபவர்களாயின், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவை அவர்களுக்குக் கிடையாது என்றும் அநுரகுமார தெரிவித்தார்.
“ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலால் நாட்டில் இனங்களுக்கிடையில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஏப்ரல் 21இற்கு முன்னரான சமூகத்திற்கும் அதற்குப் பின்னரான சமூகத்திற்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. சகவாழ்வு, ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் என அனைத்தும் தற்போது அழிவடைந்து விட்டன. ஒருவர் மற்றவரை சந்தேகத்துடன்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் காரணம் யார்? எம்மை பொறுத்தவரை இதற்கு இரண்டு தரப்புக்கள்தான் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இதில், ஒரு தரப்பிலிருந்து தற்போது சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார்கள். ஆனால், இன்னொரு தரப்பினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதாவது, தாக்குதலை தடுக்க முடியுமாக இருந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்காத ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவர்களுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதுதான் மக்களின் இன்றைய கேள்வியாக இருக்கிறது. மக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம், இங்கு யாருக்கும் கிடையாது. எனவே, இந்த அரசாங்கம் வெளியேறவேண்டும் என்பதுதான் அனைவரதும் கோரிக்கையாக இருக்கிறது.
இனியும் இந்த அரசாங்கத்துக்கு ஆட்சியில் அமர வேண்டிய தேவையில்லை. ஆட்சி செய்யக்கூடிய தகுதியையும் அரசாங்கம் இழந்துவிட்டது. இதற்காகவே, இந்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் கொண்டுவந்துள்ளோம்.
தேர்தலுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே இதனை நாம் கொண்டுவந்துள்ளோம். இதனை எமக்கான பிரதானக் கடமையாகவே நாம் கருதுகிறோம். ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை அரசாங்கம் தடுக்காமல் விட்டமையானது, உண்மையில் அரசமைப்புக்கு எதிரான ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களின்போது அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். ஆனால், இந்த விடயத்தில் குற்றவாளிகள் எமது முன்னாள் இருக்கும்போது, எவ்வாறான நடவடிக்கையை கூட்டமைப்பினர் மேற்கொள்ளப் போகிறார்கள் என்று கேட்கவிரும்புகிறேன்.
தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக அவர்கள் பேராடுபவர்களாயின், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவை அவர்களுக்குக் கிடையாது.
அதேபோல், மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியது ஒரு கடமையாகும். எனவே, நாளை இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மஹிந்த தரப்பும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்றில் பெரும்பான்மையில்லாத இந்த அரசாங்கம் நிச்சயமாக வெளியேற்றப்பட்டே ஆகவேண்டும். இதற்காக நான் அனைவருக்கும் தற்போது அழைப்பு விடுக்கிறேன்” என குறிப்பிட்டார்.