திருகோணமலை துறைமுகத்தை எந்த நாட்டுக்கும் கொடுக்கமாட்டோம்!- ரணில்
திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கோ, அமெரிக்காவுக்கோ இந்தியாவிற்கோ கொடுக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு கொடுத்தலும் கூட அவர்களின் பாரிய கப்பல்கலை கொண்டு வரவோ விமானங்களையோ தரையிறக்கவோ முடியாது அதற்கான வசதிகள் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அனுரகுமார திசாநாயக மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் இலங்கை அமெரிக்க உடன்படிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
'ஒரே ஒரு சோபா உடன்படிக்கை மட்டுமே உள்ளது, நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை தவிர இது இராணுவ உடன்படிக்கையோ யுத்த கால கட்ட உடன்படிக்கையோ இல்லை. இது 1996 ஆம் ஆண்டு அப்போது இலங்கையில் உள்ள அமெரிக்க காரியாலயம் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் இது கைச்சாத்திடப்பட்டு இன்றுவரை அது கொண்டு செல்லப்படுகின்றது. இதனை நான் பாராளுமன்றதில் சமர்ப்பிக்கிறேன். இது ஒரு உடன்படிக்கை தான் எம்மிடம் உள்ளது. வேறு புதிய உடன்படிகை எதுவும் எம்மிடம் இல்லை.
அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் அக்சா என்ற உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இதில் 2017 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதனை மீண்டும் புதுப்பிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனையும் சபையில் முன்வைக்கிறேன். இது தவிர வேறு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவில்லை.
எதிர்க்கட்சி பொய்யான காரணிகளை கூறி குழப்புகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் புதிதாக உடன்படிக்கை எதையும் செய்யவில்லை. ஆனால் பேச்சுவார்த்தைகள் பல முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பல காரணிகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சில வேளைகளில் இது எமக்கு ஏற்புடையதாக இருக்கும் சிலவேளைகளில் ஏற்றுகொள்ள முடியாது.
ஊடகங்களால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதாக கூறுகின்ற காரணிகள் எமக்கு தெரியாது. அவ்வாறு ஊடகங்களிடம் ஆதாரம் இருந்தால் அதனை எம்மிடம் கட்டுங்கள். அப்படி இருந்தால் அது திருட்டுத் தனமாக செய்துகொண்ட உடன்படிக்கையாகும். இது குறித்து ஆராய பொலிசாருக்கு நான் கூறுவேன் என்றும் குறிப்பிட்டார்.