SuperTopAds

நியமனக் கடிதமின்றி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு புதிதாக வந்த கணக்காளர்!

ஆசிரியர் - Admin
நியமனக் கடிதமின்றி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு புதிதாக வந்த கணக்காளர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும்,தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று மாலை நடந்த சந்திப்பை அடுத்து, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு இன்று காலை புதிதாக ஒரு கணக்காளர் வருகை தந்துள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து வருகை தந்த அவரிடம் முறைப்படி எந்தவொரு எழுத்துமூல ஆவணமும் இருக்கவில்லை. அவர் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜ்ஜூடன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அம்பாறை அரச அதிபரின் கட்டளைக்கிணங்க தான் இங்கு வருகை தந்துள்ளதாக கணக்காளர் கூறியுள்ளார்.எஸ்.சானக என்ற அந்தக் கணக்காளரிடம் முறையான நியமனக் கடிதமோ, இடமாற்றக் கட்டளைக் கடிதமோ இருக்கவில்லை.

அதனால், அவர் பதவியை பொறுப்பேற்கவோ அல்லது வரவுப்பதிவேட்டில் ஒப்பமிடவோ இல்லை. புதிய கணக்காளர் வருகை தரும்போது உண்ணாவிரதமிருந்த சிவஸ்ரீ சச்சிதானந்த சிவக்குருக்களும், மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் சமூகமளித்திருந்தனர்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் அணி துணைச் செயலாளர் அ.நிதாஞ்சன் இன்று 12 மணியளவில் கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இதுபற்றி எடுத்துக்கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக சுமந்திரன் கூறியதாக நிதாஞ்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அலரி மாளிகைச் சந்திப்பின் பிரகாரம் தங்கள் பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் நியமிக்கப்படவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தமை குறித்து,வினவிய போது, எமது பிரதேச செயலகத்திற்கு இன்னும் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் எ.ஜே.அதிசயராஜ் குறிப்பிட்டுள்ளார்.