ஐஎஸ் தீவிரவாதத்தை அடக்கியவர்களால் ஆவா குழுவை அடக்க முடியாதது ஏன்?- ஈரோஸ்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பை ஒரு மாதத்துக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால், வடக்கில் ஒரு பகுதிக்குள் இயங்குகின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை ஏன் அடக்க முடியாது என ஈரோஸ் கட்சியின் தலைவர் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இந்தக் கேள்வியை எழுப்பினார்.
''இந்த வாள் வெட்டுக் குழுக்கள் தானாக தோற்றம் பெற்றது என்று சொல்லிவிட முடியாது. இதற்கு பின்னால் ஏதோ ஒரு பலமான பின்னணி இருக்கின்றது. தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கையை சீர்குலைப்பதற்கான எத்தனிப்பாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் பலமான இனமாக வரக்கூடாது, தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டில் தான் இது உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது.
இதன் பின்னணியை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வாள் வெட்டு வன்முறைக் கும்பல்களின் அடவாடிகளை, அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருக்கின்றது. ஒரு வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது என்றால், அந்தக் கணத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்திற்கு பிறகு தான் இராணுவமோ, பொலிஸோ அந்த இடத்திற்கு செல்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகளை, ஒரு மாதத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால், வடக்கில் ஒரு பகுதிக்குள் இருக்கின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் கும்பலை ஏன் அடக்க முடியாது?
இதற்கு பின்னணியாக யார் இருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது சாதாரண ஒரு பொதுமகனுக்கும் தெரியும். இதனால் மக்களாகிய நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இளைஞர் , யுவதிகள் விழிப்பாக இருக்க வேண்டும், பேரினவாத சக்திகள் தமிழினத்தை சீரழிப்பதற்கும், தமிழர்களுடைய அரசியல் அந்தஸ்த்து, அதிகாரம் எல்லாவற்றையும் இல்லாமல் செய்வதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்ற நிலையில், நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
இதனால் நாம் எமது அரசியல் அந்தஸ்து அதிகாரங்களை வென்றெடுப்பதற்கு நாங்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.