கூட்டமைப்பின் ஆதரவைக் கோரிய ரணில்! - அலரி மாளிகையில் நடந்த 2 மணிநேர சந்திப்பு
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே நேற்று இந்தப் பேச்சுகளில் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்தப் பேச்சுகள் நடந்தன.
முதலில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் விடயம் குறித்துப் பேசப்பட்டது. இந்தப் பேச்சின்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் பங்குபற்றினார்.
மேற்படி பிரசே செயலகம் தரம் உயர்வதாயின் அதற்கான நிதி அதிகாரமும், நிதிக் கையாள்கையும் உடன் வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர், அப்பிரதேச செயலகத்துக்காக விசேடமாக நியமிக்கப்பட்ட கணக்காளர் இன்னும் அந்தச் செயலகத்தில் போயிருந்து பணியாற்றவில்லை என்பதை ஆட்சேபனையுடன் எடுத்தியம்பினர்.
சம்பந்தப்பட்ட கணக்காளரை இன்று முதல் அந்தப் பிரதேச செயலகத்தில் போயிருந்து பணியாற்றுமாறு உத்தரவு பிறப்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தப் பிரதேச செயலகத்துக்கான தனி வங்கிக் கணக்கு உட்பட தேவையான சகலவற்றையும் ஒரே நாளில் ஏற்படுத்திக் கொடுக்கவும் பணித்தார்.
மயிலிட்டி துறைமுகத்தை விடுவித்தாலும் அப்பகுதி மீனவர்களின் குடியிருப்புப் பிரதேசங்கள் விடுவிக்கப்படவில்லை என்ற ஆட்சேபத்தை மாவை சேனாதிராஜா எம்.பி. முன்வைத்தார்.
அந்தக் குடியிருப்பு நிலப்பகுதியை விடுவிப்பதில் தாமதம் ஏன் என்று இராணுவத் தளபதியிடம் கோரி, உரிய நடவடிக்கையைத் தாம் எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை விவகாரம், அப்பகுதியை கைத்தொழில் பேட்டையாக மாற்றுதல், அதற்குச் செல்வதற்கான பாதையில் உள்ள கடற்படையினரை ஒரு பக்கமாக நகர்த்துதல் போன்ற பல விடயங்களும் பேசி இணக்கம் காணப்பட்டன.
இந்த விடயம் பேசப்பட்டபோது துறைமுகங்கள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் பேச்சில் கலந்து கொண்டார். அரசின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என இந்தப் பேச்சின்போது பிரதமர் கோரினார்.
தங்கள் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்புக்கு வந்ததும் அது குறித்துத் தாங்கள் கூடி ஒரு முடிவை எடுத்து அறிவிப்பதாக பிரதமரிடம் சம்பந்தன் தெரிவித்தார்.
இதற்கிடையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவின் அரசியல் குழு இன்று வவுனியாவில் கூடுகின்றது.அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது ரெலோவின் இரண்டு எம்.பிக்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்ற முடிவை ரெலோ அரசியல் குழு இன்று எடுத்து அதனைத் தனது எம்.பிக்கள் மீது அழுத்தமாக அது பிரயோகிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.