நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட முதலாவது அரையிறுதி ஆட்டம்!

ஆசிரியர் - Admin
நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட முதலாவது அரையிறுதி ஆட்டம்!

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று ஆரம்பமான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின.

இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமான இப்  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

மார்டின் குப்டில் - ஹென்றி நிக்கோலஷ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமறிங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 3.3 ஆவது ஓவரில் மார்டின் குப்டில் பும்ராவின் பந்து வீச்சில் கோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நியூஸிலாந்து அணியின் முதல் விக்கெட் ஒரு ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

2 ஆவது விக்கெட்டுக்காக ஹென்றி நிக்கோலஷ் மற்றும் அணித் தலைவர் கேன் வில்லியமசன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தையே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தனர். அதன் காரணமாக நியூஸிலாந்து அணி முதல் 10 ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 27 ஓட்டங்களை பெற்றது.

இந்த ஓட்டமே நடப்பு உலகக் கிணணத் தொடரின் பவர் பிளேயில் (10 ஓவர்) ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிகுறைந்த ஓட்டமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

15 ஆவது ஓவரில் நியூஸிலாந்து அணி 55 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை 18.2 ஆவது ஓவரில் ஹென்றி நிக்கோலஷ் 28 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய டெய்லருடன் கைகோர்த்து ஆடிவந்த வில்லியம்சன் 29.3 ஆவது ஓவரில் அரைசதம் விளாசினார். அத்துடன் நியூஸிலாந்து அணியும் 30 ஓவர் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 113 ஓட்டத்தையும், 35 ஓவர் நிறைவில் 133 ஓட்டத்தையும் பெற்றது.

இந் நிலையில் 35.2 ஆவது ஓவரில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் மொத்தமாக 95 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 67 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (134-2).

வில்லியம்சன் இந்த இன்னிங்ஸில் பெற்றுக் கொண்ட 67 ஓட்டங்கள் உள்ளடங்கலாக நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் அவர் மொத்தமாக 548 ஓட்டங்களை குவித்துள்ளார். இதுவே சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் நியூஸிலாந்து அணி வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக பதிவாகியுள்ளது.

வில்லியம்சனின் வெளியேற்றத்தையடுத்து ஜேம்ஷ் நீஷம் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர நியூஸிலாந்து அணி 40 ஓவர்கள் நிறைவில் 155 ஓட்டங்களை பெற்றது. எனினும் ஜேம்ஸ் நீஷமும் 40 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து களமிறங்கிய கிரேண்ட்ஹோமுடன் கைகோர்த்த டெய்லர் 43.1 ஆவது ஓவரில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ளி அரைசதத்தை பூர்த்தி செய்ய, மறுமுணையில் கிரேண்ட்ஹோம் 44.4 ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து 16 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (200-5)

இந் நிலையில் 46.4 ஆவது ஓவரில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியலவில் மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. டெஸ்லர் 67 (95) ஓட்டத்துடனும், டோம் லெதம் 3 (4) ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா, புவனேஷ்வர் குமார், பாண்டியா, ஜடேஜா, சஹால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

மழை இடைவிடாது தொடர்ந்த காரணத்தினால் போட்டி தொடர்பான இறுதி அறிவிப்பு இலங்கை நேரப்படி இரவு 10.50 மணியளவில் வெளிவந்தது. 

அந்த அறிவித்தலுக்கு அமைவாக போட்டி இடை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே ( நியூஸிலாந்து - 46.4 ஓவர், 5 விக்கெட், 211 ஓட்டம்) நாளைய தினம் இலங்கை நேரப்படி மாலை 3.00 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்தன.

மழை குறுக்கிட்டால் ஐ.சி.சி. விதிமுறைகள் :

* அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ‘ரிசர்வ் டே’ வைக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்படும். இதன்போது ஆட்டம் இடை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே ஆரம்பமாகும். 

* அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டம் சமநிலையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.

* அரையிறுதி ஆட்டத்தை மழையால் கைவிட வேண்டிய சூழ்நிலை வந்தால், லீக் சுற்றில் முன்னிலை வகித்த அணிக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைக்கும்

* இறுதி ஆட்டத்துக்கான நாட்களில் மழை பெய்தால் இரு அணிகளும் கிண்ணத்தை பகிர்ந்து கொள்ளும்.


photo credit ‍: icc

Radio
×