SuperTopAds

கடற்படையினரின் சோதனைச்சாவடியில் மோதுண்ட வேனில் பயணித்த 12 பேர் காயம் VIDEO

ஆசிரியர் - Admin
கடற்படையினரின் சோதனைச்சாவடியில் மோதுண்ட வேனில் பயணித்த 12 பேர் காயம் VIDEO

பாறுக் ஷிஹான்

வீதியை மறித்து நெருக்கமாக போடப்பட்டுள்ள  கடற்படையினரின் வீதி தடையை மோதிய வேன்  வண்டியில் பயணம் செய்த  12 க்கும் அதிகமாவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமுனை ஒலுவில் துறைமுக பிரதான நுழைவாயில் பிரதான வீதியை இணைக்கின்ற பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடற்படையினரின் வீதி தடை பரிசோதனை பகுதியில் இரவு 8.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் உகந்தை முருகன் ஆலயத்தை  தரிசித்து விட்டு தங்கள் சொந்த இடமான கல்முனை பகுதியை நோக்கி செல்லும் போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில்  படுகாயமடைந்த 4 வயதான சிறுமி   அம்பாறை  வைத்தியசாலைக்கு   மாற்றப்பட்டு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் 8 பெண்கள் மற்றும்  4ஆண்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்  சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் அவ்இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த விபத்து நடைபெற்ற பகுதியை சூழ்ந்த மக்கள் இவ்வாறு   பிரதான வீதியில் கடற்படையினர் அமைத்துள்ள சோதனைச்சாவடி இருளில் உள்ளதாகவும் எந்தவித வெளிச்சமும் இன்றி காணப்படுவதனால் அருகே செல்லும் போது தான் முன்னால் சோதனை சாவடி தென்படுவதாக விசனம் தெரிவித்துள்ளதுடன் மோதுண்ட  டொல்பின் வேன்   விபத்துக்குளளாக காரணம்  சோதனை சாவடி தூரத்தில் இருந்து பார்க்கின்ற போது தெரிவதில்லை என குற்றம் சாட்டினர்.

மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் வாகனம் ஒன்று வருவதற்கான இடைவெளியை குறைத்து சோதனை சாவடியை கடற்படையினர் அமைத்துள்ளார்கள்.இவ்விடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இச்சோதனை சாவடி பிரயோசனமற்றது.அதிகளவான விபத்துக்கள் இச்சோதனை சாவடியினால் ஏற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும் தற்காலிக சோதனைசாவடிகள் அமைத்து பாதுகாப்பு தரப்பினர் சோதனைகளை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.