அம்பாறை கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமம் உகந்தைக்கான பஸ்சேவை VIDEO
பாறுக் ஷிஹான்
கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் காலை 6 மணிமுதல் கதிர்காமம் மற்றும் உகந்தை மலை முருகன் ஆலயங்களுக்கான பஸ் சேவை நடைபெற்றுவருகின்றது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதிர்காமம் உகந்தை நோக்கி பயணிக்கின்றனர்.
கல்முனையில் இருந்து கதிர்காமத்திற்கான ஒரு வழிப்பயணக் கட்டணமாக 393ரூபாவும் இதேபோன்று உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு 305 ரூபாவும் அறவிடப்படுகின்றது. பக்தர்களின் நலன்கருதி முன்கூட்டிய ஆசனப்பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
அதிகமான பக்தர்கள் வருகை தரும் இடத்து வசதிக்கேற்ப மேலதிக பஸ் சேவைகளும் ஒழுங்குபடுத்தி கொடுக்கப்படுவதாக கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தின் நேரக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. கதிர்காமமத்திற்கு கால் நடையாகச் செல்பவர்கள் தற்போது உகந்தை மலை முருகன் ஆலயத்திற்குச் சென்று அங்கிருந்து காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கிப் பயணம் செய்கின்றனர்.
கடந்த 27 ஆம் திகதி திறக்கப்பட்ட காட்டுப்பாதையுடாக இதுவரை 21 ஆயிரத்து 640 க்கு அதிகமான பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். இக் காட்டுப்பாதையானது எதிர்வரும் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.