நிலமை மோசமாகி வருகிறது..! முஸ்லிம் மக்களுக்காக போராடவும், ஐ.நாவரை செல்லவும் தயாராகி வருகிறோம்..
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அச்சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன.
சம்பவம் நடைபெற்று 21நாட்களுக்கு பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்கள், வியாபார நிலையங்கள், பள்ளிவாயல்கள் என அனைத்தும் திட்டமிட்டு தாக்கப்பட்டன.
அதுமட்டுமன்றி பௌத்த தேரர்கள் நினைத்தபடியான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. தேரர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தமையும்
மற்றைய தேரரொருவர் காலக்கெடு விதித்ததையும் சொற்ப காலப்பகுதியில் இந்த நாடு மீண்டும் பற்றி எரிந்துவிடும் என்ற நிலைமைகளே காணப்பட்டிருந்தன.
இந்த சூழல் மாற வேண்டும் என்றுதான் முயற்சிகளை எடுக்கின்றோம். இது நடக்காவிட்டால் ஜனநாயக வழியில் போராட்டங்களை நடாத்தவும்,
ஐ.நா சபை வரை செல்லவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினா் றிஷாட் பதியூதீன் கூறியுள்ளாா்.
அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறியிருப்பதாவது,
அதற்காகவே முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருந்தோம். இனவாதம் தலைவிரித்தாட வேண்டும்
என்ற தேரர்களின் ஆசை நிராசையாக்கப்பட்டு இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அதேநேரம், நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது
என்பதிலும் கவனத்தினை கொள்கின்றோம். எனினும், முஸ்லிம் இனத்திற்கு எதிராக மிகமோசமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதனால் தொடர்ந்தும்
பொறுமைகாக்க முடியாத காரணத்தினால் எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
அதனைத்தவிர எமக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. எமது ஜனநாயக போராட்டத்தின் ஒரு அங்கமாகவே ஐ.நாவை நாடுவதையும் கொண்டுள்ளோம்.
ஐ.நாவை நாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? பதில்:- ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல.
ஐ.நாவின் உறுப்பு நாடாக இலங்கையும் உள்ளது. அவ்வாறிருக்க, குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில்
நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை.
தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்.