வீதியில் நிறுத்தி பாடசாலை மாணவா்களை தடியால் அடித்து துன்புறுத்திய முட்கொம்பன் ம.வி அதிபா்..! தட்டிக்கேட்டவா்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்..
பூநகாி- முட்கொம்பன் மகாவித்தியாலய அதிபா் பாடசாலைக்கு தாமதமாக சென்ற மாணவா்களை வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளதுடன், தட்டிக்கேட்ட பெற்றோா் மற்றும் இ.போ.ச சாரதி ஆகியோரை இராணுவத்தை கொண்டு மிரட்டியுள்ளாா்.
முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். ஒழுங்கான பாதை வசதிகள் இல்லாத செக்காலை, அரசபுரம் ஆகிய கிராமத்திலிருந்து 4 கிலோமீற்றர் காட்டுப்பாதை வழியாக
மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றனர். கடந்த 4ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் வெளிவாயில் கதவு பூட்டப்பட்டு, தாமதமாக வந்தவர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர். சுமார் 20 மாணவர்களிற்கு வயது வேறுபாடின்றி பொதுமக்கள் முன்னிலையில்
அதிபர் தடியால் அடித்து தண்டனை வழங்கினார். பாடசாலைக்கு வெளியில் இந்த சம்பவம் நடந்ததை கண்ணுற்ற பெற்றோரும், மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து சாரதியும் இது தொடர்பில் தட்டிக் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முறையான பாதை வசதி இன்மையால் மாணவர்கள் தாமதமாக சென்றதாகவும், பூநகரி காட்டுக்குள் வெளியிடங்களிலிருந்து யானைகள் கொண்டு வரப்பட்டு விடப்பட்டுள்ளதால் துவிச்சக்கர வண்டியில் வருவதற்கும் மாணவர்கள் அச்சமடைந்து,
பேருந்திற்காக காத்திருந்து அதில் செல்வதாகவும் தாக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர். இந்தநிலையில், மறுநாள் (5) அருகிலுள்ள முகாமிலுள்ள படையினர் பாடசாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டு,
அதிபருடன் முரண்பட்ட பெற்றோர், மற்றும் இ.போ.ச சாரதி ஆகியோர் அச்சுறுத்தப்பட்டதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.