ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், ஏன் இந்த அப்பாவிகளுக்கு வழங்க முடியாது- சட்டத்தரணி சுகாஸ்

ஆசிரியர் - Admin
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், ஏன் இந்த அப்பாவிகளுக்கு வழங்க முடியாது- சட்டத்தரணி சுகாஸ்

நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை ஶ்ரீலங்காவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொது மன்னிப்பின் அடிப்படையில் ஶ்ரீலங்கா ஜனாதிபதியால் விடுவிக்க முடியும். என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் அங்குத் தெரிவிக்கையில்,

அரசியல் கைதி சகாதேவனின் மரணம் இயற்கை மரணமாக நாங்கள் கருதவில்லை. அவருக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக அவரது உயிரை பாதுக்காத்திருக்க முடியும். ஆனால் அரசும், சிறைச்சாலை நிர்வாகமும் வழமை போன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது அசமந்தமாகச் செயற்பட்டதன் காரணமாகவேதான் சகாதேவன் மரணமடைந்திருக்கிறார்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலும் கவலைக்குரிய விடயம் சிலருக்கு எதிராக இன்றுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.

சிலருக்கு எதற்காக இந்த அரசு தங்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றது என்ற விடயம் கூடத் தெரியாது. அதனால் தான் நாங்கள் நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கையினை முன்வைத்து வந்திருக்கின்றோம். இலங்கையினுடைய சட்டதிட்டங்களுக்கு அமைவாக அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படல் வேண்டும்.

இது இலங்கையில் நடந்திராத ஒரு விடயமல்ல. புதிய விடயமுமல்ல. 1980 களின் பிற்பகுதிகளில் இலங்கை அரசிற்கு எதிராக ஆயுத வழியில் போராடிய ஜே.வி.பியினருக்கு எவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதோ அவ்வாறான ஒரு பொது மன்னிப்பை இந்த அரசியல் கைதிகளுக்கும் வழங்க முடியும். இவர்களுக்கு எதிரான எந்தவிதமான பாரதூரமான குற்றச்சாட்டுக்களும் கிடையாது, அவர்களும் உண்மையில் எந்தவித குற்றத்தையும் இழைத்திருக்கவில்லை.

ஜே.வி.பியினருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால் எதற்காக இந்த அரசியல் கைதிகளுக்கு வழங்க முடியாது. இதைத் தான் நாம் அரசாங்கத்திடம் முன்வைக்கின்ற கேள்வி. அது மாத்திரமல்ல அண்மையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

நீதிமன்றத்தை அவமதித்த ஒரு காட்டுமிராண்டிக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், ஏன் இந்த அப்பாவிகளுக்கு வழங்க முடியாது. குறைந்தது இவர்களைப் பிணையிலாவது விடுவிக்கலாம்.

இதேவேளை, இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கம்பெரலியவுக்கு விலைபோயிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் காத்திரமான முறையிலே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தால் அதாவது வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக இருந்தால் அரசியல் கைதிகளை விடுதலைசெய் என்று கூறியிருக்கலாம்.

ஆனால் முதுகெலும்பற்ற கூட்டமைப்பு கேட்ட விடயம் கம்பெரலியவைத் தா எல்லாவற்றையும் விட்டு விடுகிறோம் என்ற கூறி இன்று அரசியல் கைதிகளினுடைய விடுதலையைக் கூட மறந்திருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இதனை விடப்போவதில்லை. மேலும் சகாதேவனின் விடயத்தினையும் ஐ.நா.வரை கொண்டுசெல்வோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு