3 மாதங்களில் சிவில் விமான நிலையமாக மாறப்போகும் பலாலி விமான நிலையம்..
யாழ்.பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பலாலியை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதி அமைச்சர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
முதற்கட்டமாக பலாலி விமான நிலையம் நவீன மயப்படுத்தப்படும்.
இதற்கான நடவடிக்கைகள் ஜூலை 5ம் திகதி ஆரம்பிக்கப்படும். இரண்டு அல்லது மூன்று மாதக் காலத்திற்குள் இந்த நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் இந்த விமான நிலையம் சிவில் விமான நிலையமாக செயற்படும்.
இலங்கையில் 15 விமான நிலையங்கள் உண்டு. இவற்றில் 2 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். மத்தள விமான நிலையம் தற்பொழுது செயற்பட்டு வருகின்றது. இலங்கை சிவில் விமான சேவை எட்டு தெற்காசிய மத்திய நாடுகளில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இது ஆசிய நாடுகள் மத்தியில் ஆறாவது இடத்திலும் உலக நாடுகள் மத்தியில் 19வது இடத்திலும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையங்களில் நவீன விஷேட பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.