தடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்!
கிரேண்ட்ஹோம் - ஜேம்ஸ் நீஷமின் இணைப்பாட்டம் காரணமாக சரிவிலிருந்து மீண்ட நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 237 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும் மழை காரணமாக போட்டி சற்று நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸிலாந்து அணி வீரர்களுக்கு பாகிஸ்தான் பந்துகளை எதிர்கொள்வது பெரும் சவாலாக அமைந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 83 ஓட்டத்துக்குள் ஐந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து நிலைகுலைந்தது.
1.1 ஆவது ஓவரில் மார்டின் குப்டில் 5 ஓட்டத்துடனும், 6.2 ஓவரில் முன்ரோ 12 ஓட்டத்துடனும், 8.6 ஆவது ஓவரில் ரோஸ் டெய்லர் 3 ஓட்டத்துடனும், 12.3 ஆவது ஓவரில் டொம் லெதம் ஒரு ஓட்டத்துடனும், 26.2 ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன் 41 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து 6 ஆவது விக்கெட்டுக்காக கிரேண்ட்ஹோம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் நிதானமாக துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தனர்.
இதனால் நியூஸிலாந்து அணி 35 ஓவரில் 132 ஓட்டத்தையும், 40 ஓவரில் 152 ஓட்டத்தையும், 45 ஓவரில் 184 ஓட்டத்தையும் பெற்றிருந்த நிலையில் 47.4 ஆவது ஓவரில் கிரேண்ட்ஹோம் மொத்தமாக 71 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 64 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் மிட்செல் சாண்டனர் 5 ஓட்டத்துடனும், ஜேம்ஸ் நீஷம் மொத்தமாக 112 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஒட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களாக 97 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுக்களையும், மெஹமட் அமீர் மற்றும் ஷெடப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.