நாஸ்காம் விடுத்த எச்சரிக்கையால் வழிக்கு வந்த டிரம்ப் நிர்வாகம்!
நாஸ்காம் எச்சரிக்கையைத் தொடர்ந்து, எச்-1பி விசா விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதில்லை என அமெரிக்கா கூறியிருக்கும் அதேவேளையில், அந்நாட்டில் எச்-1பி விசா மறுக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அண்மைகாலமாக, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத சூழலில், எச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க, டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இந்திய ஐ.டி. நிறுவன கூட்டமைப்பான நாஸ்காம், டிரம்பின் முடிவால், இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பை விட, அமெரிக்காவிற்கு ஏற்படும் பாதிப்பும், இழப்பும் அதிகமாக இருக்கும் எச்சரிக்கை விடுத்தது.
நாஸ்காமின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சற்று கலக்கமடைந்த டிரம்பின் நிர்வாகம், உயர் கல்வித்தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசா திட்டத்தை இப்போதைக்கு ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், எச்-1பி விசா மறுக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை சதவீதம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க கொள்கைக்கான தேசிய அமைப்பு நடத்தியிருக்கும் ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.