அரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் - சிறிமதன்

ஆசிரியர் - Admin
அரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் - சிறிமதன்

என்றோ ஒருநாள் விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் அடைபட்டு கிடக்கும் இவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் 

கம்பிகளுக்கு பின்னால் இன்றும் தங்கள் விடுதலையை எதிர்பார்த்து தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பவர்களே  நாம் வழமை போன்று அரசியல் கைதிகள் என்று ஒற்றை வார்த்தையில் கூறுபவர்கள்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர அரசாங்கத்தை எச்சரித்திருந்தார்.

இவற்றையெல்லாம் ஒன்று கூட்டிப் பார்க்கின்ற போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஒன்றாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வேறொன்றாகவும் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.இந்த முரண்பட்ட போக்குகளுக்கு மத்தியில் சமநிலை காணப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் சுமுகநிலை பெறுமா? என்பது கேள்விக்குறியாகவே உருவாகியுள்ளது.

அரசியல் கைதிகளின் விடயத்தை பொறுத்தவரையில் ஏன் இந்த அசமந்தப் போக்கு. அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகிறது. அவ்வாறாயின் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைத்திருக்கும் அந்தத் தமிழர்கள் யார்? இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த அனேக போராளிகளுக்கு முன்னனைய அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. அவ்வாறாயின் தற்போது எஞ்சியுள்ள 200 தொடக்கம் 300 வரையான அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அப்படியென்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என அரசாங்கம் கருதுகிறது என தெரியவில்லை.

ஒரு விடயம் மட்டும் உண்மை. அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்காமல் எதனையுமே தமிழர் தரப்பால் சாதிக்க முடியாது. இது பற்றி பேசினால் அரசாங்கம் சங்கடத்திற்குள்ளாகிவிடும், சிங்கள மக்கள் கோபித்துவிடுவார்கள் என்று நினைப்பவர்கள் தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கினால் இந்த நிலைமை இப்படியே தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உண்மையிலேயே இது தீர்க்கமுடியாததொரு பிரச்சினையா அல்லது இதற்கு தீர்வினை பெறும் வகையில் அரசாங்கத்தினை இறங்கிவரச் செய்ய முடியாதளவிற்கு தமிழ்த் தலைமைகள் பலவீனமாக இருக்கிறார்களா? அல்லதுபோனால் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அரசை தக்கவைத்துக்கொள்ளும்  சம்பந்தர் தலமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?

இந்தப் பிரச்சினையை ஒன்றுபட்டுத் தீர்ப்பதற்கு உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தமிழர் தரப்பிலும் பலவீன நிலையே வெளிப்படுத்தப்படுகிறது.  இவையெல்லாம் அரசியல் கைதிகளுக்கு எதிரான வியூகங்களுக்கு சாதகமாக்கப்பட்டு வருகின்றன.

இவ் அரசியல் கைதிகள் விவகாரமானது வெறுமனனே சிறைக்குள் அடைபட்டு இருப்பர்களது பிரச்சினை மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த குடும்பம் உறவுகளினதும் பிரச்சினை. அரசியல் கைதிகளை தண்டிப்பதாக கூறிக்கொண்டு அவர்களுடன் சேர்த்து அவர்களின் குடும்பங்களும் தண்டிக்கப்படுவதை யார் உணருவர்.மொத்தத்தில் எல்லா தரப்பினரதும் பொறுப்பீனங்கள், அரசியல் நலன்களுக்கு, தமிழ் அரசியல் கைதிகள் பலிக்கடாக்களாகி நிற்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு