இலங்கை குண்டுவெடிப்பில் இருந்து மீண்ட மாணவனுக்கு பள்ளியில் உற்சாக வரவேற்பு!
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கர சம்பவத்தில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற பலரும் தேறி வருகின்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷெனான் எனும் 6ம் வகுப்பு மாணவன் சிகிச்சைக்கு பின்னர் பள்ளிக்கு மீண்டும் திரும்பியுள்ளான்.
அங்கு அவனுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மாணவர்கள் பூங்கொத்து, பரிசுகள் என கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.
மேலும் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ஷெனானுக்கு வலது கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முகத்தில் இருந்த தீக்காயம் ஆறி வருகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.