SuperTopAds

துபாயில் தாயை கொடூரமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கி கொன்ற இந்தியர் கைது!

ஆசிரியர் - Admin
துபாயில் தாயை கொடூரமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கி கொன்ற இந்தியர் கைது!

துபாயில் வசிக்கும் 29 வயதுடைய இந்தியர் திருமணமாகி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவரது தாய் கடந்த ஆண்டு இவருடன் சேர்ந்து இருப்பதற்காக வந்துள்ளார். மகனுடன் தங்க வந்த அவருக்கு பல்வேறு கொடுமைகள் மகன், மருமகளால் அரங்கேறியுள்ளது. 

அதே குடியிருப்பில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘அவரது மனைவி தன் குழந்தையை மாமியார் வந்ததில் இருந்து சரியாக பார்த்துக் கொள்வதில்லை. நான் வேலை விட்டு வரும் வரை உங்களிடம் இருக்கட்டும் என கூறி என்னிடம் குழந்தையை விட்டுச் சென்றார். மூன்று நாட்கள் கழித்து அவரது வீட்டின் பால்கனியில் வயதான அவரின் மாமியார் அரைகுறை ஆடையுடன் மோசமான நிலையில் விழுந்துக் கிடந்தார். உடனடியாக செக்யூரிட்டிக்கு தகவல் கொடுத்தேன்.

உடனே அவரது வீட்டு கதவை தட்டினேன். ஆம்புலன்சுக்கு போன் செய்துவிட்டேன். அவர் அழுததையும், பட்ட வேதனையையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவரது மகனை உடன் வரச் சொல்லி கூப்பிட்டேன். வர மறுத்துவிட்டார். வந்த ஆம்புலன்சிடம் அவர் பிறகு வருவார் என்று கூறிவிட்டேன்’ என வலியோடு கூறினார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மருத்துவர் கூறுகையில், ‘சொல்ல முடியாத அளவுக்கு வலியை அந்த மூதாட்டி அனுபவித்துள்ளார். கால்கள் கடுமையாக வீங்கி இருந்தன.

மேலும் உடலின் பல்வேறு பகுதிகளில் தீக்காயங்கள் பெரிதாக இருந்தன. இது குறித்து அவரது மருமகளிடம் கேட்டபோது, ‘தானாகவே சுடு தண்ணீரை அவர் மேல் கொட்டிக் கொண்டார்’ என கூறினார். சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவரது நிலை எப்படி உள்ளது என்பதை அருகில் இருந்து பார்க்க கூட பிடிக்காமல் அவர் தூரமாகவே இருந்தார். மூதாட்டியின் விலா எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்ட்டிருந்தது.

பல்வேறு கருவிகளால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் எலும்புகள் நொறுங்கியுள்ளன. வலது கண்ணின் கருவிழியும் பாதிக்கப்பட்டுள்ளது’ என கூறினார். இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் நடந்ததை நேரில் பார்த்த அதே குடியிருப்பில் வசிக்கும் இந்தியர், அந்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் அவரது மகன், மருமகளை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த துபாய் கோர்ட், ஜூலை 3ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. அதுவரை தம்பதியை காவலில் வைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.