என்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் - டிரம்ப் உறுதி!
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தான், மீண்டும் போட்டியிடுவது குறித்து, 18-ந்தேதி புளோரிடா மாகாணத்தின் ஆர்லண்டோ நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முறைப்படி அறிவிப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி ஆர்லண்டோவில் உள்ள ஆம்வே அரங்கத்தில் ஜனநாயக கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் கலந்து கொண்டார். துணை ஜனாதிபதி மைக் பென்சும், அவரது மனைவி கரேனும் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு மத்தியில் பேசிய டிரம்ப், 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்தார். இதை கேட்டு உற்சாகம் அடைந்த கூட்டத்தினர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பின்னர் அங்கேயே ஜனாதிபதி தேர்தலுக்கான தனது முதல் பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப் கூட்டத்தினர் மத்தியில் பேசியதாவது:-
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றது அமெரிக்க வரலாற்றில் வரையறுக்கப்பட்ட முக்கிய தருணம் ஆகும். எனது பதவி காலத்தில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி உள்ளது. எனவே அடுத்த 4 ஆண்டுகளுக்கும் நாங்கள் இதே இடத்தில் இருக்க ஆதரவு தாருங்கள்.
இதன் மூலம் அமெரிக்காவை பலம் பொருந்திய சிறப்பான நாடாக தொடர்ந்து வைத்திருப்பேன். கடந்த 2½ ஆண்டுகளில் நாங்கள் செய்ததை வேறு யாரும் செய்து இல்லை. அமெரிக்காவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை உலக நாடுகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது. அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்கிற கொள்கையில் நான் தீர்க்கமாக இருக்கிறேன்.
குடியரசு கட்சியினர் நாட்டில் சோசலிசத்தை திணிக்க நினைக்கிறார்கள். அமெரிக்கா ஒருபோதும் சோசலிச நாடாக மாறாது. அவர்கள் நாட்டை அழிக்கப்பார்க்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடந்து விடவும் கூடாது. குடியரசு கட்சியினரும், ஊடகங்களும் இணைந்து பொய் செய்திகள் மூலம் நம்மை தோற்கடிக்க முயற்சிக்கலாம். ஆனால் அது நடக்காது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பொதுக்கூட்டம் நடந்த அரங்கத்துக்கு வெளியே டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.