கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

விக்கியின் முகவராகச் செயற்படுகிறது தமிழ் மக்கள் பேரவை! - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
விக்கியின் முகவராகச் செயற்படுகிறது தமிழ் மக்கள் பேரவை! - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

'தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டங்களை நாங்களே தான் தயாரித்தோம். வேறு எவரும் தயாரிக்கவில்லை. இவ்வாறெல்லாம் நாங்கள் செய்த பின்னர் தமிழ் மக்கள் பேரவையை விட்டு விலக எங்களுக்கு விருப்பமில்லை. ஏனென்றால், நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த பல விடயங்கள் இருக்கத்தக்கதாக வேறு எவரும் வந்து உரிமை கோர இடமளிக்க முடியாது. ஆனாலும், நாங்கள் வெளியேறவில்லை. இருந்தும் பேரவையின் கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தியிருக்கின்றோம்.

இப் பேரவையானது அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான விக்கினேஸ்வரனின் கட்சிக்காக ஒரு முகவர் அமைப்பாக மாற்றப்படுவதாலே நாம் அதில் இருந்து விலகியிருந்தோம். அப் பேரவையில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு கட்சியின் முகவர் அமைப்பாக அது மாற்றப்படுகிறது. பல கட்சி உறுப்பினர்கள் பேரவையில் தமது பெயர்களைப் பதிவுசெய்து பங்களிப்பை செய்து வந்தனர். அதில் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் தான் அதிகமாக இருந்தனர்.

அவ்வாறான நிலையில், எங்கள் உறுப்பினர்களைக் கூட தன்னுடைய கட்சியில் வந்து சேருங்கள் எனக் கேட்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அப் பேரவை தற்போது முழுக்க முழுக்க விக்னேஸ்வரனின் கட்சியைப் பலப்படுத்தி மற்றவர்களைப் பலவீனப்படுத்த மற்றத் தரப்புக்களை உடைப்பதற்கான ஒரு செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது. ஆகவே, இணைத்தலைவர் என்ற பெயரில் இயங்கக் கூடிய ஒருவரின் பொருத்தமான செயற்பாடாக அதனை நாங்கள் பார்க்க முடியாது.

இவ்வாறான பல பிரச்சினைகள் பேரவைக்குள் இருக்கின்றன. அந்தந்த நேரங்களில் அவற்றை நாங்கள் வெளிப்படுத்துவோம். பேரவை விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாக மாற்றப்படுவதால், அதிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம். அதே நேரம் பேரவையில் மிகவும் மதிக்கக்கூடிய பலர் இருக்கின்றனர். அவர்களுடைய பெயரையும் பங்களிப்பையும் உதாசீனம் செய்யும் வகையில் தான் இச் செயற்பாடுகள் அமைகின்றன. அதனை அந்தந்த நபர்கள் விளங்கிக் கொண்டு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அல்லது பேரவை செயலில்லாத இன்னுமொரு முகவர் அமைப்பாக மாற்றப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

Radio
×