இலங்கையர்களை ரீயூனியன் தீவுக்கு கடத்திய 3 இந்தோனேசியர்கள்!

ஆசிரியர் - Admin
இலங்கையர்களை ரீயூனியன் தீவுக்கு கடத்திய 3 இந்தோனேசியர்கள்!

இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 13 அன்று மீன்பிடி படகு வழியாக 120 இலங்கையர்கள் 4000 கிலோ மீட்டர் பயணித்து இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருந்தனர். இதற்காக ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் இந்திய ரூபாய் முதல் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை( 2,230-5,580 அமெரிக்க டாலர்கள்) ஆட்கடத்தல்காரர்களிடம் கொடுத்திருக்கின்றனர். 

இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவு, பிரஞ்சு அரசு நிர்வகிக்கும் தீவாக இருந்து வருகின்றது. இந்த தீவுக்கு சென்ற இலங்கையர்கள், பிரஞ்சு அரசிடம் தஞ்சம் கோரும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.

இது ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய பிரஞ்சு அரசு, அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்து 120 பேரில் 60 பேரை நாடுகடத்தியது. இந்த சூழலில், இவர்களை அழைத்து சென்ற 3 இந்தோனேசிய படகோட்டிகளும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு துணைப்புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான விசாரணை மே15 நடைபெற்ற நிலையில், 3 இந்தோனேசியர்களுக்கும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ரியூனியன் தீவிலிருந்து செயல்படும் Imaz Press என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 2018 முதல், 273 இலங்கையர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருக்கின்றனர். அதில் 130 பேர் இன்றும் அத்தீவில் இருந்து வருகின்றனர். 

சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது. இந்த நிலைமையை மனதில் கொண்டு, பிரான்சின் தீவுப்பகுதிக்கு செல்லும் முயற்சியை இலங்கையர்கள் நம்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது. 

Ads
Radio
×