தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வை வழங்க ஐ.நா வட, கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தவேண்டும்

ஆசிரியர் - Admin
தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வை வழங்க ஐ.நா வட, கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தவேண்டும்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அறிந்து, அவர்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை வடக்கு – கிழக்கு மக்களிடையே பொதுசன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ் இன படுகொலை வாரத்தின் 19 ஆவது நிகழ்ச்சி காரைதீவு கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை (17) மதியம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த கனகராசன் அமலன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான சபாபதி நேசராசா மற்றும் ஆறுமுகம் பூபாலரட்ணம் மற்றும் தமிழ் உணர்வாளர்களும் இதில் பங்கேற்று இன படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, ஈகை சுடர் ஏற்றினர்.

இந்த நிகழ்விடத்திற்குச் சென்ற படைப் புலனாய்வாளர்கள் நிகழ்வை ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். இதனால் அங்கு கலந்துகொண்டவர்கள் அச்சமடைந்தனர். எனினும் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. 

இங்கு சிவாஜிலிங்கம் மேலும் கூறுகையில், 

சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லப்படுகின்ற கடந்த 70 ஆண்டுகளாக இலங்கையின் அரச ஆயுத படைகளால் பல பத்தாயிர கணக்கில் தமிழ் மக்கள் இன படுகொலை செய்யப்பட்டனர். கிழக்கில் அந்த இன படுகொலையின் உச்ச கட்டம் வாகரையில் கோரமாக முடிந்தது. 

அதே போல வடக்கில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. முள்ளிவாய்க்காலில் பல பத்தாயிர கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு எமது தேசிய விடுதலை போராட்டம் மிக கொடூரமாக நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களையும், தமிழ் இன படுகொலைகளையும் விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரால்  2010 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு குறைந்தது 40000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக  2011 ஆம் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு குறைந்தது 70,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர் என்று அறிவித்தது. கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு மனித பேரவலம் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டது. 

இந்நிலையில்தான் நாம் நடைபெற்று முடிந்த போர் குற்றங்களுக்கும், தமிழின படுகொலைகளுக்கும் நீதி கோரி நிற்கிறோம். இதன் விளைவாகதான் மே மாதம் 18 ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த யுத்தத்தின் 10 ஆவது ஆண்டு  நினைவேந்தலை முள்ளிவாய்க்காலில் அனுட்டிக்கின்றோம். மே 12  முதல்  மே 18 வரை தமிழ் இன படுகொலை வாரத்தை அனுட்டித்து வருகின்றோம்.

போர் குற்றங்களுக்கும் இன படுகொலைகளுக்கும் நீதி வேண்டும். 20000 இற்கும் மேற்பட்டோர் நிச்சயம் காணாமல் செய்யப்படு உள்ளனர். அரச ஆயுத படையினரிடம் குடும்பம், குடும்பமாக சரண் அடைந்தவர்கள், கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? என்கிற கேள்விக்கு எமக்கு விடை நிச்சயம் கிடைக்க பெற வேண்டும். 

சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்றும் இலங்கை அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் தமிழ் மக்களின் கிராமங்களும், தனிப்பட்ட காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடை சட்டம் மீள பெறப்பட வேண்டும் என்றும் இத்தருணத்தில் கோரி நிற்கின்றோம்.

இத்தருணத்தில் மிக முக்கியமாக இரு கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாகவும் நாம் முன்வைக்கின்றோம். இலங்கையில் அரசியல் தீர்வு இல்லை என்று ஆகி விட்டது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பெற்று கொள்வதற்காக இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.  

 இதே நேரம் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டு கலப்பு முறையில் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு  இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியது. இவ்வருடமும் மார்ச் மாதம் இதே ஒப்புதலை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் வழங்கியது. இருப்பினும் அதை நடத்த விட மாட்டார்கள் என்று ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் தெளிவாக கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றின் மூலம் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய நீதியை தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை பெற்று தர வேண்டும் என்றார். 


Radio
×