SuperTopAds

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டில் வலி சுமந்து நிற்கும் தாயக உறவுகளுடன் புலம்பெயர் தமிழ் மக்கள்.

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டில் வலி சுமந்து நிற்கும் தாயக உறவுகளுடன் புலம்பெயர் தமிழ் மக்கள்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எமக்கான நீதி மறுக்கப்பட்டாலும் ஆறாதவடுவுடன் துவண்டு விடாது வீறுகொண்டு தமிழீழம் நோக்கிய பாதையில் நீதிகிடைக்கும் வரை எத்தடை வரினும் ஓய்ந்துவிடமாட்டோம் என உலகுக்கு உரத்துகூறும் முகமாகவும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைவு கூறும்முகமாகவும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரமானது தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பிரித்தானியாவில் உணர்வுபூர்வாமாக நினைவுகூறப்பட்டது.

11.05.2019 சனிக்கிழமை அன்று no10 Downing Street SW1 என்னும் இடத்தில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாயிற்தளத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வு ஆரம்பமானது.

பிரித்தானிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக சங்கவி அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து போராளி ஈசன் பொன்னுச்சாமி அவர்களால் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு பொதுச்சுடரினை மகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். 

அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்க நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழீழ உணர்வாளர்களான மிலக்சிகா சுப்ரமணியம், கோகிலன் கந்தையா, கலைச்செல்வன் சோமசுந்தரம், தயாளசிங்கம் குகேந்திரன், நிசாந்தன், கமலதாஸ் முத்துலிங்கம், ஈசன் பொன்னுச்சாமி, சுப்ரமணியம் தீபன், கதிர்காமநாதன் பரநிருபசிங்கம், தில்லைவிநாயகம் சுரேஷ்குமார், சுஜீவன் ஸ்ரீபாலகனேசன், பாலசூரியன் பிரதீபன், ஜெயவதனன் பாலசுப்பிரமணியம், கொலின் ஜோசவ், சிவா பொன்னம்பலம் ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்தனர்.

மாலை 6மணியளவில் நினைவு சுமந்த பேச்சுக்களுடன் பிரித்தானியகொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி கையேந்தல் நடைபெற்று இன்றைய அடையாள உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் கூடி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தி தங்கள் உணர்வுகளுக்கு உரம் போட்டுக் கொண்டனர்.