சென்னை அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை வென்றது மும்பை!

ஆசிரியர் - Admin
சென்னை அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை வென்றது மும்பை!

சென்னை அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி மும்பை அணி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 149 ஓட்டங்களை குவித்தது.

149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக வோட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி துடுப்பெடுத்தாடி முதல் மூன்று ஓவர்களில் 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து 4 ஆவது ஓவரை எதிர்கொண்ட டூப்பிளஸ்ஸி அந்த ஓவரின் 2 ஆவது பந்தில் 4 ஓட்டத்தையும், மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்தையும், நான்காவது பந்தில் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தையும் அடுத்தடுத்து விளாசினார். எனினும் அவர் அதே ஓவரின் இறுதிப் பந்தில் 26 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் சென்னை  அணியின் முதல் விக்கெட் 33 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. 2 ஆவது விக்கெட்டுக்காக ரய்னா மற்றும் வோட்சன் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாட சென்னை  அணி 5.5 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது.

இந் நிலையில் 9.2 ஆவது ஓவரில் ரய்னா ராகுல் சாஹருடைய பந்து வீச்சில் 8 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ராயுடு ஒரு ஓட்டத்துடனும், தோனி 2 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர் (82-4).

5 ஆவது விக்கெட்டுக்காக வோட்சன் மற்றும் பிராவோ ஜோடி சேர்ந்தாட 15 ஓவர்களின் நிறைவில் சென்னை 88 ஓட்டத்தையும் பெற்றதுடன் 15.4 ஓவரில் 100 ஓட்டங்களையும் கடந்தது. அது மாத்திரமன்றி வோட்சன் 44 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மொத்தமாக 16 ஆவது ஓவரில் மாத்திரம் சென்னை அணி 20 ஓட்டங்களை பெற்றது.

ஒரு கட்டத்தில் சென்னையின் வெற்றிக்கு 18 பந்துகளில் 38 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தது. ஆடுகளத்தில் வோட்சன் 56 ஓட்டத்துடனும், பிராவோ 14 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

18 ஆவது ஓவருக்காக குருநல் பாண்டியா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட வோட்சன் முதல் மூன்று பந்துகளிலும் மூன்று ஆறு ஓட்டங்களை அடுத்தடுத்து விளாசித் தள்ளினார். மொத்தமாக அந்த ஓவரில் 20 ஓட்டங்கள் பெறப்பட்டது.

அதன் பின்னர் சென்னையின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 பந்து என்ற நிலையிருக்க 18.2 ஆவது ஓவரில் பிராவோ 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (133-5).

தொடர்ந்து பும்ரா களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 19 ஓவரில் 141 ஓட்டங்கள‍ை பெற, வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 9 ஓட்டம் என்ற நிலை உருவானது. இறுதி ஓவருக்காக மும்பை  அணி சார்பில் மலிங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

வெற்றிக்கு 3 பந்துகளுக்கு 5 ஓட்டம் என்ற நிலையிருக்க சென்னை அணியின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட வோட்சன் 59 பந்துகளில் 80 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை அணிக்கு 2 பந்துகளுக்கு 4 ஓட்டம் என்ற நிலையிருந்தது.

தாகூர் களமிறங்கி 19.5 ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் தேவை என்றானது. இறுதிப் பந்தில் மலிங் எல்.பி.டபிள்யூ முறையில் தகூரை வெளியேற்றி மும்பை அணியின் வெற்றியை பறைசாற்றினார்.

இந்த வெற்றிமூலம் மும்பை அணி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுக்களையும், குருநல் பாண்டியா, மலிங்க மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 


நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு