SuperTopAds

மக்களை கொல்வதற்கு இடமளிக்கமாட்டோம்! விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி

ஆசிரியர் - Admin
மக்களை கொல்வதற்கு இடமளிக்கமாட்டோம்! விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி

மக்களைக் காப்பாற்றுவதற்காகவே நாம் போராடினோம். எமது மக்களைக் கொல்வதற்கு நாம் ஒருபோதும் துணைபோகமாட்டோம் என 512 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிலந்தவுக்கு பதிலடி கொடுத்தார் முன்னாள் போராளி ஒருவர். முன்னாள் போராளிகளை சந்திப்பு என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் உள்ள 512 படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்த படையினர், அங்கு போராளிகளுக்கு வகுப்பெடுக்க முற்பட்டபோதே முன்னாள் போராளி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் குடும்பங்களுடன் வசிக்கும் முன்னாள் போராளிகளை இன்று உடனடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள 512 தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொலைபேசிகள் ஊடாகவும் நேரடியாகவும் அவர்களின் வீடுகளுக்குச் சென்ற படையினர் இந்த அழைப்பை விடுத்தனர். சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், படையினர் திடீரென அழைத்ததால் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் அச்சமடைந்தனர்.

எனினும், இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள 512 தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்கு சுமார் 50 வரையான முன்னாள் போராளிகள் சென்றிருந்தனர். அங்கு கூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் 512 ஆவது படைப்பிரிவில் தளபதி பிரிகேடியர் நிலந்த உட்பட சில படை அதிகாரிகள் முன்னாள் போராளிகளுக்கு வகுப்பெடுத்தனர்.

இச் சந்திப்பின் போது 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த உரையாற்றுகையில், நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன்.

நான் யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம், இந்து, கிறிஸ்தவ மதங்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளேன். தற்போது உங்களை அழைத்துள்ளேன்.

தற்போது நாட்டின் ஏனைய இடங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை யாழ் குடாநாட்டிலும் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். யாழ்ப்பாணத்தின் அழகையும், யாழ்ப்பாண மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

எனவே, வெளி மாவட்டங்களில் இருந்த யாழ்ப்பாணத்திற்கு வருபவர்கள் தொடர்பாக நாம் அவதானமாக இருந்தால் கொழும்பிலும் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களிலும் நடந்த தாக்குதல்கள் போல யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்க முடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி

எனவே, வெளி மாட்டங்களில் இருந்து யாழ்.குடாநாட்டிற்குள் வருபவர்கள் தொடர்பாக எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச்செயல்களையும் இல்லாதொழிக்க முடியும். இதற்கு நீங்கள் உதவவேண்டும். – எனத் தெரிவித்தார்.

இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர்,

நாங்களும் மக்களைக் காப்பாற்றுவதற்காகவே போராடினோம். எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை. இனியும் மக்களுக்கு ஆபத்து வருவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். விழிப்பாகவே இருப்போம் எனத் தெரிவித்தார். முன்னாள் போராளி இவ்வாறு கூறிய கருத்தை இராணுவத் தளபதி வரவேற்றுப் பேசினார்.