இராணுவத்தினரை புகைப்படம் எடுத்த மாநகரசபை உறுப்பினரை கண்டித்த இராணுவம்..
யாழ்.கஸ்த்தூரியார் வீதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் நடாத்திய வீதி சோதனையினை அனுமதி பெறாமல் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்த மாநாகரசபை உறுப்பினரை இராணுவம் கண்டித்து அனுப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
யாழ்.கஸ்தூரியார் வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைத்து வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.
அவ்வேளை வீதியால் வந்த யாழ்.மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்துள்ளார்.
அதனை அவதானித்த இராணுவத்தினர் உறுப்பினரின் தொலைபேசியினை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அது குறித்து உறுப்பினரால் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் , இராணுவத்தினருடன் பேசி சமரசப்படுத்தி கையடக்க தொலைபேசியினை பெற்றுக்கொடுத்தார்.
இராணுவத்தினர் கையடக்க தொலைபேசியினை உறுப்பினரிடம் கொடுக்கும் போது அவற்றில் இருந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அழித்து விட்டே கையளித்துள்ளனர்.
அதேவேளை கடந்த சனிக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையில் நடமாடினர் எனும் குற்றசாட்டில் யாழ்.மாநகர சபை முஸ்லீம் உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யபட்டார்.
பின்னர் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே குறித்த உறுப்பினரை பொலிசார் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
தான் யாழ்.மாநகர சபை உறுப்பினர் என அடையாள அட்டையை காண்பித்தும் பொலிசார் தன்னை கைது செய்து ஒரு இரவு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தமை தனது சிறப்புரிமை மீறல் எனவும் , மாநகர சபை அடையாள அட்டைக்கு பொலிசார் மதிப்பு தரவில்லை எனவும் யாழ்.மாநகர சபை ஆணையாளரிடம் குறித்த உறுப்பினர் தொலைபேசியில் முறையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.