முன்னாள் போராளிகளை இனியாவது விடுதலை செய்யுங்கள்..! அவை தலைவா் கோாிக்கை.
மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் காவலரண் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் இருவரும் விடுதலை செய்யப்படவேண்டும். என வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், அந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த சந்தேகநபர், தாங்கள் தான் அந்த கொலையினை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் இலங்கையின் புலனாய்வுத் துறையானது மிகவும் பக்கசார்பாக செயற்படுவதாகவே நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களையும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் இந்த அவசரகால சட்டமானது தொடர்ந்து நீடிக்கப்பட அனுமதிக்க முடியாது.
எனவும் முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் சி.வி.கே. சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நமது ஆதரவினை வழங்கி உள்ளோம்.
எனினும் இரண்டு, மூன்று மாத காலப்பகுதியின் பின்னர் இந்த சட்டம் தொடர்ச்சியாக நாட்டுக்கு தேவையா என்பது தொடர்பில் நாம் பரிசீலிப்போம் அதனை ஆதரிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.