SuperTopAds

'இலங்கை குண்டு வெடிப்பு' - பயங்கரவாதிகளாக மாறிய இலங்கை தொழில் அதிபரின் மகன்கள்!

ஆசிரியர் - Admin
'இலங்கை குண்டு வெடிப்பு' - பயங்கரவாதிகளாக மாறிய இலங்கை தொழில் அதிபரின் மகன்கள்!

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்பு மற்றும் மட்டகளப்பில் அடுத்தடுத்து 8 குண்டுகள் வெடித்தன. இதில் 3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 7 இடங்களில் மனித வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. 

இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன் இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமக் நியூஸ் ஏஜென்சி மூலம் அறிவித்துள்ளனர்.   

மேலும் 3 நட்சத்திர ஓட்டல்கள், 3 தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய 7 மனித வெடிகுண்டுகள் நிற்கும் படத்தையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் முகமது ஜக்ரன் என்ற ஜக்ரன் கஸ்மி என்பவன் தலைமையில் 7 தற்கொலை பயங்கரவாதிகள் நிற்பது தெரிய வந்துள்ளது. இந்த 7 பேரும்தான் கொழும்பு நகரை குறி வைத்து தகர்த்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 7 பேருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களை பற்றிய தகவல்களை இலங்கை ராணுவமும், போலீசாரும் ஒருங்கிணைந்து சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணைகளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. 7 மனித வெடிகுண்டு தற்கொலை பயங்கரவாதிகளில் 2 பேர் அண்ணன்-தம்பி ஆவார்கள். அவர்கள் இருவரும் இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகன்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த கோடீஸ்வரர் கொழும்பில் வத்தல் மிளகாய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அண்ணன்-தம்பி இருவருமே இஸ்லாமிய மத கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து அண்ணன்- தம்பி இருவரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்துக் கொண்டனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த தொடர்பு கோடீஸ்வரர்களாக திகழ்ந்த அண்ணன்-தம்பி இருவரையும் பயங்கரவாதிகளாக மாற்றி விட்டது. அண்ணன்-தம்பி இருவரும் பயங்கரவாத இயக்கத்தினருடன் நெருங்கி பழகியது அவர்களது உறவினர்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு மிக மிக ரகசியமாக அவர்கள் தங்கள் தொடர்பை வைத்து இருந்திருக்கிறார்கள்.

நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்த போது இவர்களும் அதை அறிந்துள்ளனர். தெற்கு ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி செய்தபோது அவர்களுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் ஆதரவாக இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்துதான் இலங்கையில் கைவரிசை காட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில்தான் இந்த அண்ணன்-தம்பி இருவரும் தங்களை மனித வெடிகுண்டுகளாக மாற்ற சம்மதித்துள்ளனர். இதற்காக அவர்கள் பயிற்சியும் எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று ஒத்திகையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அண்ணன்-தம்பி இருவரும் முதலில் சின்னமான் கிராண்ட் ஓட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு சங்ரி-லா ஓட்டலுக்கு சென்றுள்ளனர். பணக்கார வீட்டு பிள்ளைகள் என்பதால் மிக எளிதாக அவர்களால் நட்சத்திர ஓட்டல்களுக்குள் செல்ல முடிந்தது.

சின்னமான் கிராண்ட் ஓட்டலில் ஒருவரும், சங்ரி-லா ஓட்டலில் மற்றொருவரும் அறை எடுத்து சனிக்கிழமை தங்கி உள்ளனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தினார்கள். அண்ணன்-தம்பி பயங்கரவாதிகள் என்பது பற்றிய தகவல்களை உறுதி செய்துள்ள கொழும்பு போலீசார் அவர்களது பெயர் மற்றும் அவர்களது பெற்றோர் பெயரை வெளியிட மறுத்து விட்டனர். விசாரணை பாதிக்கக் கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள் அனைவரது பெயரையும் தொடர்ந்து ரகசியமாக வைத்துள்ளனர்.

மற்ற 5 மனித வெடி குண்டு பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களையும் இலங்கை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்கள் பற்றிய விவரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஐ.எஸ்.பங்கரவாத இயக்கம் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதிகளில் 3 பேர் அபுஉபைதா, அபுபாரா, அபு முக்தர் என்று அறிவித்துள்ளது. இந்த 3 பேரும்தான் சங்ரி-லா, சின்னமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்களை தகர்த்தவர்கள் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த 3 பேரில் 2 பேர்தான் கொழும்பு கோடீஸ்வரரின் மகன்கள் என்று கருதப்படுகிறது.

அதுபோல கொழும்பு, நெகோம்பா, மட்டகளப்பு ஆகிய இடங்களில் உள்ள 3 தேவாலயங்களை தகர்த்தவர்கள் அபுஹம்சா, அபு கலில், அபுமுகமது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7-வது மனித வெடிகுண்டாக செயல்பட்டவர் அபுஅப் துல்லா என்று தெரிய வந்துள்ளது. இவர் கொழும்பில் உள்ள இந்தியரின் ஓட்டலை தகர்ப்பதற்காக நுழைந்தார். அந்த சமயத்தில் கொழும்பில் குண்டு வெடித்து பரபரப்பு ஏற்பட்டு காட்டுத்தீயாக தகவல்கள் பரவி இருந்தது. அந்த சமயத்தில்தான் 7-வது மனித வெடிகுண்டு ஓட்டலுக்குள் நுழைய முயன்றது. ஆனால் அங்கு செய்யப்பட்டு இருந்த பலத்த பாதுகாப்பு காரணமாக அவரால் தாக்குதலை நடத்த இயலவில்லை. தன்னை சிலர் சந்தேகத்துடன் பார்ப்பதை அறிந்த அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

கொழும்பு புறநகரில் ஒரு வீட்டுக்குள் அவர் சென்றார். அவரை பிடிக்க போலீசார் வீட்டுக்குள் புகுந்தபோது அவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்து 3 போலீஸ்காரர்களை கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு, மட்டகளப்பில் நாசவேலையில் ஈடுபட்ட 7 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகளும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கிர்-அல்- பகததியை சந்தித்துள்ளனர். அந்த படம் தான் நேற்று அந்த அமக் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 7 பயங்கரவாதிகளும் இருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கொழும்பை தகர்க்க உறுதி மொழி எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் சதி திட்டம் தீட்டப்பட்டு இலங்கையில் ரத்த ஆறு ஓட விடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.