SuperTopAds

ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி

ஆசிரியர் - Admin
ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரகானே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கமே ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. 2-வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் பந்து ஏதும் சந்திக்காமலேயே ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

அதன்பின் ரகானே உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். ரகானே 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார். அக்சார் பட்டேல் பந்தில் இசாந்த் சர்மாவிடம் கொடுத்த கேட்சை தவறவிட்டார். அதன்பின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ராஜஸ்தான் 5.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. தொடர்ந்து ரன் விகிதம் ஓவருக்கு சராசரியாக 10 என வந்து கொண்டே இருந்தது. ரகானே 32 பந்தில் அரைசதம் அடித்தார். 10.2 ஓவரில் ராஜஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.

மறுமுனையில் விளையாடிய ஸ்மித் 31 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். ரகானே 58 பந்தில் தனது 2-வது ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார்.

ரகானேயின் சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. ரகானே 105 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

பின்னர் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக தவானும், பிரித்வி ஷாவும் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். தவான் அரைசதம் அடித்தார். அடித்த சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் (54). அடுத்த வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் வெளியேறினார். 

அதைத்தொடர்ந்து வந்த ரிஷப் பந்த், பிரித்வி ஷாவுடன் இணைந்தார். ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பிரித்வி ஷா 44 ரன் அடித்திருந்த போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த ருதர்போர்டு 11 ரன்னில் வெளியேற அதைத்தொடர்ந்து வந்த கொலின் இங்க்ராம்,  ரிஷப் பந்த்துடன் இணைந்தார். இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிஷப் பந்த் 78 ரன்னுடனும், இங்க்ராம் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.