விக்னேஸ்வரன் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்ல! - வரதராஜபெருமாள்

ஆசிரியர் - Admin
விக்னேஸ்வரன் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்ல! - வரதராஜபெருமாள்

வடக்கு மாகாண சபையை ஊடாக எதையும் செய்யாது கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லர் என வடக்கு -கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

'வடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்த போது முதலமைச்சராக இருந்த நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கற்பனை அரசியலை செய்து கொண்டு தாம் மாற்றுத் தலைமை என்கின்றார். அதிகாரத்தில் இருக்கும் போது ஆக்கபூர்வமாக எதையும் செய்யாதவர் கட்சி தொடக்கி மக்களுக்கு எதை செய்யப் போகின்றார்?

புதிய கட்சி, கூட்டணி என்ற பெயரில் அரசியல் இலாபம் காணவே தவிர மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், அதிகாரத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் அதனையே மாற்றுத் தலைமையாக வர விரும்புபவர்கள் முன்னெடுக்க வேண்டும். ஆனால் முன்னாள் முதல்வர் விக்கியோ அல்லது அவருடன் கூட்டு வைத்திருப்பவர்கள் கற்பனையில் வாழ்பவர்கள், கற்பனை அரசியலே செய்து வருகின்றனர்.

இவர்களினால் அரசுடன் மோதியோ பேச்சுவார்த்தை மூலமோ எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது. அண்மையில் கூட இலங்கை அரசும் பாதுகாப்பு தரப்பும் இராணுவ முகாம்கள் உள்ள நிலங்களை விடுவிக்க முடியாது என இறுமாப்புடன் கூறி வருகின்றது. அப்போது கூட எமது தமிழ் தலைமைகள், கட்சிகள் மௌனம் சாதித்து வருகின்றது. அத்துடன் வெறுமனே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் எதுவும் நடக்கப்போவதும் இல்லை.

இலங்கை அரசு பகுதியளவில் காணிகளை விடுவித்தாலும் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மட்டுமே மக்களின் காணிகளை விடுவிக்கின்றது. எந்த அரசு வந்தாலும் மக்களின் காணிகளை விடுவிப்போம் என கூறியே ஆட்சிக்கு வருகின்றனர். பின்னர் தமிழர்களை ஏமாற்றுபவர்களாகவே மாறுகின்றனர். இந்த நிலைமையை யாராலும் மாற்ற முடியாது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு