தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி!
இந்தியப்படைக்கு எதிராக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அன்னை பூபதியின் சொந்த இடமான மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னாரது சமாதியில் மலரஞ்சலி செலுத்தி, ஈகைச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பூபதி அம்மாவின் பிள்ளைகள், உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று அன்னாருக்கு தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
இதேவேளை இன்று காலை 9 மணிக்கு அன்னை பூபதியின் நினைவுதினம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்ததுடன், மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் ரி.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்றினார்.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள் அன்னை பூபதிக்கு நினைவுச்சுடரினை ஏற்றி, அஞ்சலி செலுத்தினர்.