SuperTopAds

தமிழ் இளைஞன் அடித்துக் கொலை..! பொலிஸ் அதிகாாி உள்ளிட்ட 5 பேரை நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
தமிழ் இளைஞன் அடித்துக் கொலை..! பொலிஸ் அதிகாாி உள்ளிட்ட 5 பேரை நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்தனா் என குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கில் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாாி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாரை இம்மாதம் 29ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் கட்டளை கிடைத்துள்ளதாக அநுராதபுரம் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன. 

திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிஷான்த பிரியபண்டார, ராஜபக்ச முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ச, கோன்கலகே ஜயன்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய ஐந்து முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மனித குலத்துக்கு எதிரான சித்திரவதைக் குற்றத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அநுராதபுரம் சிறைச்சாலையில் அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் ஐவருக்கும் எதிராக சிறிஸ்கந்தராஜா சுமணனை ராமநாதபுரம் என்னுமிடத்தில் வைத்து தண்டனைச் சட்டக்கோவை 140ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கூடிய காயம் விளைவித்த குற்றச்சாட்டும் மற்றும் அதே இடத்தில் வைத்து அவரைக் கொலை செய்தமைக்காக 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய கொலைக் குற்றச்சாட்டும் என 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்து அதிகாரி உள்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார்.

இந்த வழக்கை ஆரம்ப விசாரணைக்காக வரும் 29ஆம் நாள் திகதியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், அன்றைய தினம் எதிரிகள் ஐவரையும் மன்றில் முற்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டுள்ளது.
பின்னணி

சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னரான காலப் பகுதியில் இடம்பெற்ற 35 லட்சம் ரூபா மதிக்கத்தக்க திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமணன் பொலிஸ் காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸாரால் கிளிநொச்சி நீதிவான் மன்றில் அறியிடப்பட்டது.

இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பெரும் குற்ற வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் இருவர், சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 பொலிஸார் மீது சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்லாகம் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுப் பத்திரத்தை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்வைத்தனர்.

அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தால் பொலிஸ் அதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 பொலிஸாருக்கு எதிராக 1994ஆம் ஆண்டு சித்திரைவதைகள் சட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

2 பொலிஸார் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிசான்த பண்டார உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டுச் சட்டம், இலங்கை சித்திரவதைகள் சட்டம், உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான தீர்ப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 

பன்னாட்டு நீதிமன்ற போர்க்குற்றத் தீர்ப்புக்கள், உகண்டா நீதிமன்ற சித்திரவதைக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்டவைக்கு அமைவாக 6 குற்றவாளிக்களுக்கும் அதிகூடிய தண்டனையாக தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

வழக்குத் தொடுனர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி குமார் ரட்ணம், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் சிறிஸ்கந்தராசா சுமணைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் 5 பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பகர்வுப் பத்திரம் மீதான சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. 

அதன் நிறைவில் சந்தேகநபர்கள் ஐவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி கட்டளையிட்டார்.

வழக்கு மேல் நடவடிக்கைக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியால் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 296இன் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.