SuperTopAds

வடக்கில் இருந்து படைகளை விலக்க முடியாது! - ருவன் விஜேவர்த்தன

ஆசிரியர் - Admin
வடக்கில் இருந்து படைகளை விலக்க முடியாது! - ருவன் விஜேவர்த்தன

தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு வடக்கில் இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கில் படை விலக்கம் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ருவன் விஜேவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுவார்களாயின் அவ்விடயத்தில் அரசாங்கம் கலந்தாலோசித்து உரிய தீர்வை முன்வைக்கும். 

மேலும் அச்சுறுத்தல் இருப்பதாக கருதும் குடும்பம் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்த தீர்வாகும். ஆனால், இதற்காக முப்படைகள் மற்றும் பொலிஸாரை ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு கேட்க முடியாது.

தேசிய பாதுகாப்பு, எல்லை கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ, வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாத நிலைமை உள்ளது. 

இவ்விடயத்தில் எதிர்கால நாட்டின் நலனையும் கருத்திற்கொண்டு பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்து கலந்துரையாடி, பின்னர் அரசாங்கம் பரிந்துரை ஒன்றை முன்வைக்க வேண்டும்” என ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.