SuperTopAds

கூட்டமைப்பு எம்.பிக்கள் சகிதம் 29ம் திகதி யாழ்ப்பாணம் வருகிறாா் சம்மந்தன். பாதுகாப்பு அமைச்சுடன் நேரடி மோலுக்கு வாய்ப்பு..

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்பு எம்.பிக்கள் சகிதம் 29ம் திகதி யாழ்ப்பாணம் வருகிறாா் சம்மந்தன். பாதுகாப்பு அமைச்சுடன் நேரடி மோலுக்கு வாய்ப்பு..

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுக்க காணிகள் மற்றும் இராணுவத்திற்கு வழங்குவதற்காக சுவீகாிக்கப்படும் காணிகள் தொடா்பில் ஆராய்வதற்கான உயா்மட்ட மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிா்வரும் 29ம் திகதி திங்கள் கிழமை இடம்பெறவுள்ளது. 

நேற்றுக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இது குறித்துத் தெரியப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் எம்.பிக்கள், கடற்படை, விமானப்படை, இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

மண்டைதீவில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணி நேற்று இடம்பெற இருந்தது. இதனை எதிர்த்து மண்டைதீவு கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் மாபெரும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன்போது, காணிகள் சுவீகரிப்பு – விடுவிப்பு தொடர்பில் சகல தரப்பினரும் விரைவில் கூடி முடிவொன்றை மேற்கொள்வது எனவும், அதுவரை காணி அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்தி வைப்பது எனவும் ஜனாதிபதி தலைமையில் நடந்த கலந்துரையாடலில் எங்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் யாழ்ப்பாணத்தில் காணிகள் அளவீடு இடம்பெறுவது தவறானது என சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதில் கூட்டமைப்பையும் பங்கேற்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்காக யாழ்ப்பாணத்துக்கு வரும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் எம்.பிக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.