வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் அடிமை சேவகம்..! காணியை பௌத்த மடத்திற்கு தாரைவாா்த்துவிட்டு, உாிமையாளரை காட்டில் வாழவிட்ட அநாகாிகம்.
தனது காணியில் பௌத்தமடம் ஒன்றை அமைப்பதற்கு தனது அனுமதியை கேளாமல் வவுனியா வடக்கு பிரதேச செயலகம் அனுமதி கொடுத்துள்ளதாகவும், இதனால் தான் தற்போது காட்டு பகுதியில் வீடு ஒன்றை அமைத்துக் கொண்டு தங்கியிருப்பதாக காணி உாிமையாளா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையின் பின்புறமாக உள்ள காணியில், விகாரையைப் பராமரிக்கும் பிக்கு மற்றும் சிலர் தங்குவதற்கு இரு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் அந்தக் காணிகளுக்கு உரிமை கோருகின்றார். அந்த இரு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள 3 ஏக்கர் காணி தனக்குச் சொந்தமானது என்றும், அந்தக் காணியைத் துப்புரவாக்கச் சென்றபோது அருகில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்துகின்றனர் என்றும் அந்தப் பெண் கூறுகின்றார்.
“போரால் இடம்பெயர்ந்து 2006ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியாவுக்குச் சென்றேன்.
2017ஆம் ஆண்டு நான் மீண்டும் நாடு திரும்பினேன். எனது காணியைப் பார்க்கச் சென்றபோது அங்கு இரு கட்டடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நான் எனது காணியைத் துப்புரவாக்க முயன்றேன். காணிக்கு அருகில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதற்குத் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.
அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர். தற்போது எனக்கு வீட்டுத் திட்டம் கிடைத்துள்ளது. காணிப் பிரச்சினையால் வீட்டை அமைக்க முடியாதுள்ளது.
எனது காணிக்குப் பின்புறமாக உள்ள காணி ஒன்றைத் தருகின்றோம் என்று வவுனியா வடக்குப் பிரதேச செயலர் கூறுகின்றார். ஆனால் அங்கு வசிக்க முடியாது. அது காட்டுப் பகுதியாக உள்ளது.”- என்று அந்தப் பெண் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். அது தொடர்பான விசாரணை நேற்றுமுன்தினம் வவுனியாவில் நடைபெற்றது.
காணிக்கு அருகில் உள்ள இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி, 56ஆவது படைப்பிரிவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி, பிரதேச செயலக அலுவலர் ஆகியோர் ஆணைக்குழுவால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
எந்த அடிப்படையில் காணி விடயத்தில் நீங்கள் தலையிடுகிறீர்கள்? என விசாரணை அதிகாரிகளால் இராணுவத்தினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தாம் அந்தப் பெண்ணை அச்சுறுத்தவில்லை என்றும், பிக்கு ஒருவர் விகாரை அமைந்த காணியை பராமரித்துத் தரவேண்டும் என்று கோரியமைக்கு அமையே அதைப் பராமரித்தோம்.
காணி தொடர்பான அதிகாரங்கள் தமக்கு இல்லாததால் இந்த விடயத்தில் இருந்து முற்றாக ஒதுக்கிக் கொள்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்ததுடன், அதை எழுத்து மூலமும் தந்தனர் என்று மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக வவுனியா வடக்குப் பிரதேச செயலர் க.பரந்தாமனிடம் கேட்டபோது, அந்தக் காணிப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றும், கட்டடம் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்குப் பின்புறமாக அமைத்துள்ள காணி பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்தார்.
ஆனால் தனது விருப்பத்துக்கு மாறாக அந்தக் காணி தரப்பட்டுள்ளது என்றும், தனது காணியே தனக்குத் தேவை என்றும் பாதிக்கப்பட்ட பெண் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடமையில் இருந்த அதிகாரியான சட்டத்தரணி லீனஸ் வசந்தராஜாவிடம் கேட்டபோது
முறைப்பாட்டாளரான பெண் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர் என்ற ரீதியில் நாம் ஆழமான கரிசனை கொண்டுள்ளோம்.
பிரதேச செயலகமே இந்த விடயத்தில் சரியான முடிவை வழங்க வேண்டும். பௌத்த விகாரை அமைந்துள்ள 7 ஏக்கர் காணி 2010ஆம் ஆண்டளவில் வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்தால் பௌத்த விகாரை அமைக்க வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குரிய உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டளவில் மீள்குடியமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் காணியின் உரித்துத் தொடர்பாக முறையாக ஆராயாது பிரதேச செயலகத்தால் விகாரை அமைக்கக் காணி வழங்கப்படடுள்ளது.
இந்த விடயத்தில் காணியை உரிமை கோரும் பெண்ணின் சம்மதத்துடன், அவர் விரும்பும் தீர்வை வழங்குவதற்குப் பிரதேச செயலகம் முன்வர வேண்டும். – என்றார்.