கேபிள் இணைப்பு விவகாரம், மாநகரசபையில் களேபரம். சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு..
யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்ட கேபிள் இணைப்புக் கம்பங்களை அகற்றாமைக்கு முதல்வர் இ.ஆனல்ட்டுக்கு எதிராக சபையில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் மாநகர சபை அமர்வில் குழப்பம் ஏற்பட்டதால் சபையை 10 நிமிடங்களுக்கு முதல்வர் ஒத்திவைத்தார்.
கம்பங்களை அகற்றாமைக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கப் பின்னடிப்பதே காரணம் என முதல்வர் சபையில் வெளிப்படுத்தினார். அத்துடன் பொலிஸாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஒன்றை சபை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரினார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை ஜனவரி மாத முற்பகுதியில் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவையின் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கில் முதல்வர் இ.ஆனல்ட், கேபிள் கம்பங்களை அகற்றியமை சரியானது என யாழ்ப்பாணம் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்தக் கட்டளையை ஆட்சேபித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த்து கேபிள் நிறுவனம்.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு மேலாகியும் சட்டத்துக்குப் புறம்பாக கேபிள் கம்பங்களை முதல்வர் அகற்றாமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகியன கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த பின்னடிப்புச் செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் முன்மொழிந்தார். அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வ.பார்த்திபன் வழிமொழிந்தார்.
பொலிஸாருக்கு எதிரான கண்டனத் தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.