தீா்மானங்களால் நிறைந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் தேவைக்காக ஒரு துண்டு காணியை கூட வழங்குவதில்லை. என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தீா்மானங்கள் நேற்று நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருட முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான சோ.சேனாதிராசா மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கருத்து கூறுகையில்,
அரச தலைவர் மற்றும் ஆளுநருக்கு என்று வரம்பு எல்லைகள் உள்ளன. அதை அவர்கள் தெரிந்து செயற்பட வேண்டும். தன்னிச்சையாகச் செயற்பட முடியாது.
எமக்கும் மக்களுக்கும் தெரியாமல் இங்கு காணி அபகரிப்புகள் நடைபெறுகின்றன. அரசுடன் கதைத்து முடிவு எட்டப்பட்டுள்ளது. அரச தலைவர் செயலணியின் தீர்மானம், முறையான அமைச்சரவைத் தீர்மானம், மக்களின் கருத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்படாமல் காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள் மேல் இடங்களில் இருந்து வந்தால் பிரதேச செயலர்கள் அதை நடைமுறைப்படுத்த முன்னர் எமக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் பிரதேச செயலர்கள் தெளிவாக இருங்கள். அண்மையில் வலிகாமம் வடக்கில் காணிகள் அபகரிப்பு பதற்கு மக்களின் எதிர்ப்பு, எங்களின் பேச்சு மூலமாக நிறுத்தப்பட்டது. அதில் 734 ஏக்கர் சிமெந்துத் தொழிற்சாலைக்குச் சொந்தமானது.
ஆகவே அதனை மீள இயங்க வைப்பதற்கும் தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும் அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் கடற்படை கேட் கின்றனர். அவர்களுக்கு எத்தனை ஏக்கர் வேண்டும் என்ன தேவைக்கு வேண்டும் என்பது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும் என்றார்.
கூட்டம் பற்றி அறிவிப்பு
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் 3 மணித்தியாலங்களுக்குள் நிறைவுறுத்தப்பட வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்க்க முடியாத விடயங்களே இங்கே முதன்மையாக ஆராயப்பட வேண்டும் என்று தற்போது அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட
திட்டங்கள்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் ஊடாகக் கிடைக்கப்பெற்ற நிதி மூலங்களின் அடிப்படையில் 13 அரச அலுவலகங்கள் ஊடாக 5 ஆயிரத்து 973அபிவிருத்தித் திட்டங்கள் 8 ஆயிரத்து 293 மில்லியன் ரூபா செலவில் செய்து முடிப்பதற்குக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
கிராம எழுச்சி
கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் வைக்கப்படும் பெயர்ப் பலகை தேவையில்லை. அதற்குச் செலவிடும் பணத்தை முழுமையாக அந்தத் திட்டத்துக்கே செலவிடலாம் என்று தெரிவித்த வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், ஒரு திட்டத்துக்கு 30 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டால் பெயர்ப் பலகைச் செலவு போக மிகுதி சுமார் 23 ஆயிரம் ரூபாவே கிடைக்கிறது -– என்றார்.
இதை மாகாணத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பி பிரதிநிதி கோரினார். மாகாணத்தின் 15 அதிகாரங்களைப் பறிப்பதற்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் இன்று தமது பிடி இல்லாதபடியால் இதே கோரிக்கையை வைப்பது வேடிக்கையானது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் தெரிவித்தார்.
பெயர்ப் பலகை போடுவது நிதி வீண் விரயம் என்றால் இது பற்றித் தீர்மானம் எடுத்து அரசுக்கு அனுப்புவோம் என்றார் சேனாதிராசா.
காணி சுவீகரிப்பு
“எதிர்வரும் 11ஆம் திகதி மண்டை தீவுப் பகுதியில் 11 பேரின் காணிகள் கடற் படைக்கு வழங்குவதற்கு அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளன” என்று நாடளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். “எமக்குத் தெரியாமால் எந்தக் காணியும் சுவீகரிப்பதற்கு அனுமதியில்லை. இது தொடர்பாக உரிய தரப்பினருடன் பேசுகிறேன்” என்று மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
“நான்கு பேருக்கு சொந்தமான 12 பரப்புக் காணியை மானிப்பாய் பொலிஸ் நிலைய விடுதி மற்றும் அணி வகுப்பு மரியாதை செய்யும் இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சண்டிலிப்பாய் பிரதேச செயலர் தெரிவித்தார்.
“காணி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள இடத்தில் வாடகைக்கு இருக்கின்றனர். பொலிஸ் நிலையத்துக்குத் தேவையான காணி ஒன்று நவாலியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 பரப்புக் காணி உரிமையாளர் ஒருவரின் சம்மதத்துடன் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் 12 பரப்புக் காணியும் வேண்டும் என்று கோரி அதற்கான அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேச செயலர் தெரிவித்தார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூட்டத்தில் கலந்து கொண்டமையால் அவருடன் கலந்துரையாடி மாற்றுக் காணி ஒன்றை அடையாளம் காணக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸார் தவிர்ந்த இராணுவத்தினர் மற்றும் கடற் படையினர் 43 இடங்களில் காணிகளை சுவீகரிப்பதற்கு அளவீட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதாக மூத்த நில அளவை அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் காணிகள் அடையாளம் காணப்பட்டு இரண்டு பாதுகாப்புப் பிரிவினரும் கையகப்படுவதற்கு அளவீட்டுப் பணிகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது – என்றார்.
அவை உரிமையாளர்களின் சம்மதத்துடன் வழங்கப்பட்டுள்ளதா அல்லது பலவந்தமாக அளவீட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதா என்று பிரதேச செயலர்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும் – என்றார் சேனாதிராசா.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்கு வழங்க வேண்டிய காணியைப் பெற்றுத் தாருங்கள் என்று போதனா மருத்துவ மனைப் பணிப்பாளர் தெரிவித்தார். மருத்துவ மனைக்கு வழங்குவதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட 3 பரப்புக் காணி மருத்துவ மனைக்கு முன்பாகவுள்ளது.
அங்கு சில பொலிஸார் காவலுக்கு உள்ளனர் என்றார். காணி தனியார், அரசுக்குச் சொந்தமானதா என்ற உரிமம் தொடர்பில் ஆராயப்பட்டு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வீடமைப்பு
வலி. வடக்கு மாவை கலட்டியில் பல வீடுகள் கட்டப்பட்டபோதும் எவரும் வசிப்பதில்லை. வீடுகள் இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஈபிடிபி பிரதி நிதி கேள்வி எழுப்பினார். அங்கு வீடுகள் இல்லாதவர்களுக்கே அவை வழங்கப்பட்டுள்ளன.
வேலை நிமித்தம் வேறு இடத்தில் உள்ளனர். வேலை நிறைவடைந்து இங்குள்ள வீடுகளில் தான் வசிக்கின்றனர். வீடுகள் ஒன்றும் வெறுமையாக இல்லை – என்று வலி. வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
சாவகச்சேரி பிரதேசத்தை மீள் குடியேற்ற பிரதேசமாக ஒருவரும் கருதவும் இல்லை கண்டு கொள்ளவும் இல்லை இவ்வாறு சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார். எமது பிரதேசத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் தேவையாக உள்ளன. ஆனால் மக்களுக்கு வீடுகளும் இல்லை காணிகளும் இல்லை -– என்றார். அரச காணிகள் இங்கு இல்லை என்று பிரதேச செயலர் பதிலளித்தார்.
காணி உரிமம் பிழை
யாழ்ப்பாண மாவட்டத்தில் கள்ள உறுதி முடித்து காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார். வீடுகளை நாம் வழங்கும் போது இவ்வாறான சிக்கல்களை எதிர் கொள்கின்றோம். குறைந்த விலையில் காணி கிடைக்கிறது என்று மக்கள் அதனை வாங்குகிறார்கள். அதன் உரிமம் வேறு நபரில் பதிவு இருக்கும். இது வரை 80 பேர் இவ்வாறு அறியாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
உயர்கல்வி நிறுவனங்கள்
கல்வி சார்ந்த பிரச்சினைகளை ஆராய்வதற்கு பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியிலிருந்து பிரதிநிதி ஒருவர்கூட கூட்டத்துக்கு வரவில்லை என்று நேற்றைய கூட்டத் தில் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் இந்து சமயத்துக்கான பீடம் ஒன்று வேண்டும் என்று கல்விச் சமூகத்தால் சுட்டிக் காட்டப்பட்டது.
கோப்பாய் ஆசிரியர் கலா சாலையில் அனைத்துக் கற்கை நெறிகளும் கற்பிக்கக்கூடிய வகையில் மனித வளம், பௌதீக வளங்கள் வேண்டும் என்று அதன் அதிபர் வேண்டுகோள் விடுத்தார். தேசிய கல்வியியற் கல்லூரியில் பதிவாளர் நியமிக்கப்படாமையால் 4 மில்லியன் அபிவிருத்தி வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
கல்வித் தரம் உயர்வு
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் கல்வி மட்டம் உயர்ந்துள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி மட்டம் 2011ஆம் ஆண்டு 55 வீதமாகக் காணப்பட்டது. தற்போது 70 வீதமாக அதிகரித்துள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 2017ஆம் நாடு 63 வீத சித்தி வீதம் காணப்பட்டது. தற்போது 75 வீதமாகக் காணப்படுகிறது.
க.பொ.த உயர் தரத்தில் கணிதம், உயிரியல், வணிகம் ஆகிய துறைகளில் சிறந்த பேறுகளைப் பெறுகிறோம் என்றார்.
தென்மராட்சிக் கல்வி வலயத்தில் எந்தக் குறைபாடும் இல்லையா என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். வலயக் கல்விப் பணிப்பாளர் வல யம் சார்பான விடயங்களை ஒரு சில வசனங்களில் வரிகளில் சொல்லி முடித்த நிலையில் அவர் இவ்வாறு வினாக்களை தொடுத்தார். அதற்கும் பணிப்பாளர் பதிலளித்தார்.
தண்ணீர்ப் பிரச்சினை
யாழ்ப்பாணத்தில் அதிக நன்னீரை உறிஞ்சி உவர் நீராக்காமல் நீர் வளச் சபையின் அறிவுரையின் கீழ் செயற்பட வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றத்தினர் தெரிவித்தனர். காரைநகர் தண்ணீர்ப் பிரச்சினையும் பேசப்பட்டது. கடற்படையினரின் மிகையான தண்ணீர் உறுஞ்சலைத் தடுப்பதற்குப் பிரதேச சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
சட்டத்தரணிகளுக்கு நன்றி
சுன்னாகம் உள்ளிட்ட மக்களின் நீர் நிலைகளுக்குள் மின் வழங்கும் நிறுவனத்தின் கழிவு எண்ணை கலந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு நீதியை நிலை நாட்டிய சட்டத்தரணிகள் மற்றும் ஏனையோருக்கு நன்றி தெரிவித்து அது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனால் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.