ரவிகரனின் குரல்வளையை இறுக்கும் பொலிஸாா், பௌத்த பிக்குகள்..! அடங்க மறுக்கும் ரவிகரன்.
முல்லைத்தீவு - நாயாறு நீராவியடி ஏற்றத்தில், கடந்த காலங்களில் பிள்ளையார் ஆலயம் மாத்திரம்தான் இருந்ததெனவும், வேறு எந்தவித மத அடையாளங்களும் இருக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போலீசாரின் விசாரணையில் தான் திட்டவட்டமாக தெரிவித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடிக்கல் நாட்டுவதற்காக அத்திவாரம் வெட்டியதாக, நாயற்றில் அத்துமீறி தங்கியிருக்கும் பௌத்த பிக்கு, போலீசாரிடம் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.
அதற்கமைய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விசாரணை செய்வதற்காக போலீஸ் நிலையம் வருமாறு, முல்லைத்தீவு போலீசார் 07.04.2019 இன்றைய நாள் அழைத்திருந்தனர்.
குறித்த போலீசாரின் அழைப்பாணையை ஏற்று ரவிகரன் இன்று சரியாக காலை 09.00 மணிக்கு முல்லைத்தீவு போலீஸ் நிலையம் சென்றிருந்தார்.அந்தவகையில் சுமார் ஒரு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றன.
விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி மாதம் 14ஆந் திகதி செம்மலை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள, நாயாறு நீராவியடி ஏற்றத்திலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் அப்பகுதி தமிழ் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த வழிபடுகளில் நானும் கலந்திருந்தேன்.
வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
அந்த ஆலய வளாகத்தில் அடிக்கல் நாட்டியது தொடர்பில், நாயாற்றில் குந்தியிருக்கும் பௌத்த பிக்கு போலீசாரிடம் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் விசாரிக்க இன்று என்னை அழைத்திருந்தார்கள்.
மேலும் விசாரணைகளின்போது, என்னை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஆலய நிர்வாகத்தினர் அழைப்புக்கேற்ப நான் அவ்விடம் சென்ற விடயத்தினைத் தெரிவித்திருந்தேன்.
அத்துடன் அந்த நீராவியடி ஏற்றப் பகுதியில், பல ஆண்டுகள் தொன்மைவாய்ந்த பிள்ளையார் ஆலயம்தான் அங்கு இருந்ததென்ற விடயத்தினையும் தெரியப்படுத்தினேன்.
குறிப்பாக பௌத்த மத அடையாளங்களோ அல்லது சைவம் தவிர்ந்த வேறு எந்த மத அடையாளங்களோ அவ்விடத்தில் இருக்கவில்லை என்பதையும் தெரிவித்தேன்.
எனவே அவ்விடத்தில் பௌத்த மத அடயாளங்கள் இருந்ததாக கூறப்படும் தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.
மேலும் எனது பூர்வீக வாழிடம் முல்லைத்தீவு என்பதனால், சிறு பராயத்திலே அவ்விடத்தில் பிள்ளையாரை வழிபட்ட தகவல்களைத் தெரியப்படுத்தியதுடன்,
காலங்காலமாக அவ்விடத்தில் பிள்ளையார் ஆலயம் இருந்துவந்தமையையும் தமிழர்கள் அவ்வாலயத்தை வழிபாடுசெய்த விடயத்தினையும் விசாரணைகளில் தெரியப்படுத்தியிருந்தேன் என்றார்.