SuperTopAds

திருமணத்திற்கு 10 நாட்களே இருந்த நிலையில் உயிாிழந்த பெண், கண்ணீா் வெள்ளத்தில் உடல் நல்லடக்கம்..

ஆசிரியர் - Editor I
திருமணத்திற்கு 10 நாட்களே இருந்த நிலையில் உயிாிழந்த பெண், கண்ணீா் வெள்ளத்தில் உடல் நல்லடக்கம்..

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென கோமா நிலைக்கு சென்று உயிாிழந்த இளம்பெண்ணின் சடலம் மன்னாாில் கண்ணீா் வெள்ளத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

மன்னார் - தட்சணா மருதமடு, பாலம்பிட்டியை சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தட்சனா மருதமடுவில் உள்ள இல்லத்தில் வைத்து நேற்று இறுதி கிரியைகள் இடம்பெற்ற பின் பெருந்திரளான மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில் ஹேமாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹேமாவுக்கு எதிர்வரும் பத்தாம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் மணப்பெண்ணான குறித்த இளம் பெண் தலைவலி ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை உறவினர்கள் உடனடியாக மன்னார் மடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் தலையில் கட்டி இருப்பதை கண்டறிந்து அதனை நீக்குவதற்காக சத்திரசிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளதுடன், கடந்த மூன்றாம் திகதி பிற்பகல் அவர் உயிர் பிரிந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை ஹேமா, மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்று கடந்த வருடம் (2018) செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.