SuperTopAds

டோனி, கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

ஆசிரியர் - Admin
டோனி, கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், ரன் ஏதும் எடுக்காமல் 2வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.

அதன் பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டாய்னிஸ் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாய்னிஸ் 53 பந்துகளில் 37 ரன்களும் உஸ்மான் கவாஜா 76 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர்.

பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 19 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும், ஆஷ்டன் டர்னர் 21 ரன்களும் எடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணி 39.5 ஓவரில் 173 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்து வந்த அலெக்ஸ் காரி, ஜாசன் ஜோடி அணியின் ஸ்கோரை கனிசமாக உயர்த்தியது.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் முகமது சமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித், தவான் களம் இறங்கினர். தவான் தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேற ரோகித் உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. விராட் கோலி 44 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 37 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராயுடு 13 ரன்னில் அவுட்டானார். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 99 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய கேதார் ஜாதவ், மகேந்திர சிங் டோனி நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர். கிடைத்த பந்துகளை ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இறுதியில், இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேதார் ஜாதவ் 81 ரன்னுடனும், டோனி 59 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. #INDvAUS #Dhoni #KedarJadhav