முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

ஆசிரியர் - Admin
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச தொடர் இது தான். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஏறக்குறைய 13 பேர் யார்-யார் என்பது உறுதியாகி விட்டது. எஞ்சிய இரு 2 இடத்திற்கு தான் போட்டி நிலவுகிறது. 

அந்த 2 இடத்திற்கு யாரை சேர்க்கலாம் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த ஒரு நாள் தொடர் உதவும். மாற்று தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு லோகேஷ் ராகுல் பெயர் அடிபடுகிறது. 20 ஓவர் தொடரில் முறையே 50, 47 ரன்கள் வீதம் எடுத்த ராகுல் ஒரு நாள் தொடரிலும் அசத்தினால் உலக கோப்பை இடத்தை பிடிக்க முடியும். இதே போல் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ஆகியோருக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியமானது.

20 ஓவர் தொடரில் சொதப்பிய இந்திய அணி, ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் வேகத்துடன் களம் இறங்கும். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கம் அமைத்து தருவது அவசியமாகும். அப்போது தான் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். சாதனையை நோக்கி பயணிக்கும் ரோகித் சர்மா இன்னும் 192 ரன்கள் எடுத்தால் 8 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை தொடு வார்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் திரும்புவது இந்தியாவின் பந்துவீச்சை வலுப்படுத்தும். வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் விக்கெட் கீப்பர் டோனி இன்றைய ஆட்டத்தில் கால் பதிப்பாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. நேற்று ‘கேட்ச்’ பயிற்சியின் போது அவரது வலது கையில் பந்து தாக்கி வலியால் துடித்தார். அதன் பிறகு அவர் பயிற்சி மேற்கொள்ளாமல் ஓய்வு எடுத்தார். டோனி ஆடுவது குறித்து போட்டிக்கு முன்னரே தெரிய வரும் என்று அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராகவும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. ஆனால் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில் இந்த இந்திய தொடர் ஆஸ்திரேலியாவின் பலம் மற்றும் பலவீனத்தை அறிய உதவும். 20 ஓவர் தொடரில் மேக்ஸ்வெல் அரைசதமும், சதமும் நொறுக்கியது ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

கேப்டன் ஆரோன் பிஞ்ச் பார்ம் இன்றி தடுமாறுகிறார். இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் ஒன்றை இலக்கை தாண்டவில்லை. இதே போல் கடைசி 7 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். 20 ஓவர் தொடரில் வெளியே உட்கார வைக்கப்பட்ட அலெக்ஸ் காரி விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார் என்று பிஞ்ச் தெரிவித்துள்ளார். அதே சமயம் தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்டு நேற்று அணியுடன் இணைந்த ஷான் மார்ஷ் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். இந்திய பவுலர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் சுழலில் அச்சுறுத்த கூடியவர்கள். அவர்களை சமாளிக்க திட்டம் வகுத்துள்ளதாகவும் பிஞ்ச் பேட்டியின் போது குறிப்பிட்டார்.

இரு பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. போட்டி நடக்கும் ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஆஸ்திரேலியா இங்கு ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்தியாவை (2007-ல் 47 ரன் வித்தியாசம், 2009-ல் 3 ரன் வித்தியாசம்) பதம் பார்த்துள்ளது. 2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

பொதுவாக இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையிலேயே இருக்கும். அதனால் ரசிகர்கள் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். வானிலையை பொறுத்தவரை இங்கு இன்று வானம் சிறிது மேக மூட்டத்துடன் காணப்படும். 30 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி இந்த தொடரை முழுமையாக வசப்படுத்தினால் புள்ளி எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து, முதலிடத்தில் உள்ள இங்கிலாந்தை (125 புள்ளி) வெகுவாக நெருங்கும். தொடரை இழந்தாலும் புள்ளி எண்ணிக்கை குறையுமே தவிர 2-வது இடத்தில் மாற்றம் இருக்காது.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 8 நேரடி ஒரு நாள் தொடரில் மோதியிருக்கிறது. இவற்றில் இரண்டு அணிகளும் தலா 4 தொடர்களை கைப்பற்றி உள்ளன. தற்போதைய தொடரில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி அல்லது ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, ஆடம் ஜம்பா, கம்மின்ஸ், ஜாசன் பெரேன்டோர்ப், ஜெயே ரிச்சர்ட்சன்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.#INDvAUS

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு