SuperTopAds

உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது

ஆசிரியர் - Admin
உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது

10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்க அணிகள் லண்டன் ஓவலில் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக்கில் தென்ஆப்பிரிக்காவை ஜூன் 5-ந்தேதி சந்திக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. அதற்கான கவுண்ட்டவுனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று தொடங்கியது. இந்த 100 நாட்களும் இங்கிலாந்து முழுவதும் உலக கோப்பை எடுத்து செல்லப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ‘100 நாள் கவுண்ட்டவுன்’ என்பதை குறிக்கும் வகையில் உலக கோப்பையில் 100 ரன்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* 1975-ம் ஆண்டு தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை 165 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த செஞ்சுரிகளை 103 வீரர்கள் அடித்துள்ளனர்.

* இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 6 சதங்களும், 3 முறை உலக கோப்பையை வென்றவரான ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் மற்றும் இலங்கையின் சங்கக்கரா தலா 5 சதங்களும் உலக கோப்பையில் பதிவு செய்துள்ளனர்.

*அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங், உலக கோப்பையில் குறைந்த வயதில் சதம் அடித்தவர் ஆவார். 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக அவர் சதம் கண்ட போது அவரது வயது 20 ஆண்டு 196 நாட்கள். இலங்கையின் தில்ஷன் கடந்த உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் திரட்டிய போது, அவரது வயது 38 ஆண்டு 148 நாட்கள். இவர் தான் உலக கோப்பையில் அதிக வயதில் செஞ்சுரி போட்டவர் ஆவார். அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் 2011-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் மூன்று இலக்கத்தை தொட்டார். இது தான் உலக கோப்பையில் மின்னல் வேக சதமாகும்.

*ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்திய 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் மொத்தம் 38 சதங்கள் நொறுக்கப்பட்டன. அதற்கு அடுத்து அதிகம் என்றால், 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் 24 சதங்கள் எடுக்கப்பட்டது தான். குறைந்த எண்ணிக்கையாக 1979-ம் ஆண்டு உலக கோப்பையில் 2 வீரர்கள் மட்டுமே 100 ரன்களை கடந்திருந்தனர்.

* உலக கோப்பையில் அதிக சதங்களை ருசித்த நாடுகளில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் (26 சதம்), இந்தியா 2-வது இடத்திலும் (25), இலங்கை 3-வது இடத்திலும் (23), வெஸ்ட் இண்டீஸ் 4-வது இடத்திலும் (17) உள்ளன.

*கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் (இருவரும் வெஸ்ட் இண்டீஸ்), அரவிந்த டி சில்வா (இலங்கை), ரிக்கிபாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் (இருவரும் ஆஸ்திரேலியா) மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை) ஆகிய 6 பேர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சதம் விளாசிய சாதனையாளர்கள் ஆவர்.

* உலக கோப்பையில் நிறைய சதங்களை கண்ட மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன். இங்கு 7 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி (6 சதம்) அடுத்த இடத்தில் உள்ளது.