SuperTopAds

துருவ் விக்ரமின் நடிப்பில் வெளியாகவிருந்த 'வர்மா' கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?

ஆசிரியர் - Admin
துருவ் விக்ரமின் நடிப்பில் வெளியாகவிருந்த 'வர்மா' கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படம், ‘அர்ஜூன் ரெட்டி’. இந்த படம் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேரளாவை சேர்ந்த ஈ4 எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் முகேஷ் ஆர்.மேத்தா பெற்று இருந்தார். 

முகேஷும், நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அதனால், விக்ரமின் மகனான துருவை வைத்து இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார். தனக்கு சேது படத்தின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த பாலா படத்தில் தன் மகனை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது விக்ரமின் எண்ணம். இதைத் தொடர்ந்து துருவை அறிமுகம் செய்ய பாலாவும் ஒப்புக் கொண்டார். 

அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரெய்லரும் வெளியானது. அதற்கு வரவேற்பும் கிடைத்தது. படத்தை காதலர் தினமான வரும் 14-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பு சார்பில் படம் கைவிடப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

சேது படம் மூலம் விக்ரமுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் பாலா. பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தவர். நான் கடவுள் படத்தின் மூலம், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.

இந்த நிலையில் தயாரிப்பு தரப்பு வேறு இயக்குனரை வைத்து வர்மா படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பது, தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சுமார் ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் வீணாகப்போகிறது. தயாரிப்பு தரப்புக்கு ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஆகலாம் என்கிறார்கள்.

இதன் பின்னணி பற்றி படக்குழுவை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது, ‘முதலில் ரீமேக் படத்தை எடுக்க பாலா விரும்பவே இல்லை. அவரை கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வைத்தார்கள். வர்மா படத்தின் கதையில் பாலா ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தார். அசல் தெலுங்கு பதிப்பில் சில காட்சிகளில் மட்டுமே வரும் வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் வேடத்தை பெரிதாக்கி படம் முழுக்க வருவது போல மாற்றி அமைத்தார்.

அந்த கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். படம் தொடங்கியபோதே விக்ரமுக்கும், பாலாவுக்கும் செட் ஆகவில்லை. பாலா இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் விக்ரம் அதை நிராகரித்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனை ஒப்பந்தம் செய்ய சொன்னதாகவும் தெரிகிறது.

முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், அவரது மகன் துருவ்வுக்கும் திருப்தி இல்லை. நெருக்கமான காட்சிகள் அதிகமாக படத்தில் இருந்ததும் இதற்கு காரணம். இதனால் கோபமான துருவ் சினிமாவே வேண்டாம் என்று கூறி அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். இந்த படத்தை ரிலீஸ் செய்தால் துருவ்வுக்கு மோசமான தொடக்கமாக அமையும் என்பதால் தான் விக்ரம் பாலாவின் நட்பை மீறி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

படத்தை பார்த்த தயாரிப்பாளர் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறி இருக்கிறார். ஆனால் ஒரு காட்சியை கூட மாற்ற மாட்டேன் என்று பாலா கூறிவிட்டார். தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமா வரலாற்றிலேயே முழுமையாக எடுக்கப்பட்ட படத்தை கைவிடுவது முதல் நிகழ்வு. ஆனால் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும்’ என்றனர்.